ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர், ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு ஆண்டுகளாக மனுஸ்தீவு தடுப்பு முகாமில் சிறைப்பட்டு இருந்துள்ளார்.
பப்பு நியூ கினியா என்ற தீவு நாட்டில் உள்ள மனுஸ்தீவு முகாம் அண்மையில் மூடப்பட்டு, தலைநகர் Port Moresby அருகே Bomana குடிவரவுத் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிதி உதவியுடன் கட்டியெழுப்பப்பட்டது
இம்மையம். கடந்த 9 வாரங்களாக இத்தடுப்பு மையத்தில் மோசமான சிறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மீண்டும் ஈரானுக்கு செல்லவே ஒப்புக்கொண்டுள்ளார். இங்குள்ள சிறையை விட ஈரானே மேலானது என்கிறார்.
இந்த தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்ட உதவியோ குடும்பத்தினருடன் பேசவோ அனுமதி கிடையாது என்றும் தொலைபேசி இணைப்பு இல்லை என்றும் கூறப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தொடர்பும் கட்டுப்படுத்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தகம் வாசிக்கவோ எழுதவதற்கான பொருட்களோ கூட வழங்கப்படுவதில்லை எனச் சொல்லப்படுகின்றது.
தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை சித்ரவதைப்படுத்தவே இதுபோன்ற நிலைமைகளுக்கு கீழ் தாங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அகதியாக அங்கீகரிக்கப்படாத ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மற்றும் இன்னும் பிற 51 தஞ்சக்கோரிக்கையாளர்கள் பப்பு நியூ கினியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு Bomana தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு கொண்டு செல்லப்பட்ட முதல்நாள் இரவில், 10 முதல் 12 பேர் தங்களை காயப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவித சிகிச்சையும் வழங்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“இத்தடுப்பு மையத்தில் நடந்து கொண்டிருப்பது மனிதக்குலத்திற்கு எதிரான குற்றமாகும், அரசு பயங்கரவாதத்தின் அடையாளம்,” என்கிறார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி.