நடிகர் | வசி ஆசிப் |
நடிகை | பூஜா ஸ்ரீ |
இயக்குனர் | ஏ.ஆர்.சூரியன், ஆர்.விஜயானந்த் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
ஓளிப்பதிவு | வேல்முருகன் |
பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார்.
இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் வசியின் தந்தையும் அந்த ஊரின் விவசாய போராளியுமான சீமான் மகன் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. சீமான் கொல்லப்பட என்ன காரணம்? பூஜாஸ்ரீக்கும் வசிக்கும் என்ன தொடர்பு என்ன? பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடனான பூர்வீக தொடர்பு என்ன? என்பதை படத்தின் இரண்டாம் பாதி விளக்குகிறது.
அறிமுக நாயகன் வசி பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கிறார். நடிப்பில் அறிமுகம் என்பது தெரியவில்லை. கிராமத்து கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். பூஜாஸ்ரீக்கு கதையை தாங்கும் வேடம். சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகனே சீமான் தான். இடைவேளையில் இவருக்கு தரப்படும் பில்டப்புகளுக்கு தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். விவசாயத்தின் அருமை பற்றி சீமான் பேசும் வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள். சீமான் வரும் காட்சிகள் படத்தை வலுவாக்குகின்றன.
அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். வில்லனாக வரும் விஜயானந்தும் குறை வைக்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கவும் முணுமுணுக்கவும் வைக்கின்றன. வேல்முருகனின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரம்மியம். எஸ்.பி.அகமது படத்தின் நீளத்தை சிறிது குறைத்து இருக்கலாம்.
எளிமையான கிராமத்து கதையில் சீமானை வைத்து வலிமையான வசனங்கள் மூலம் விவசாயத்தின் பெருமையையும் அவசியத்தையும் பேச வைத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி உருகவைக்கிறது. விவசாயத்தின் வலிமையை உணர்த்திய விதத்தில் தவம் கவனம் பெறுகிறது.
மொத்தத்தில் ’தவம்’ விவசாயப்புரட்சி