ஆஸ்திரேலியாவில் 12க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டுத் தீயினால் ஏற்பட்ட அதிக பாதிப்பு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 12க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. காட்டுத் தீ காரணமாக கோலா கரடி உட்பட பல்வேறு உயிரினங்கள் இறந்துள்ளன. மீட்கப்பட்ட சில விலங்குகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது.