கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்டங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாகக் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்றுக்காட்டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அதிகம் விமர்சிக்கப்படும் வெள்ளை வேன் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் இத னைக் கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக் ஷ 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோத்தபாய ராஜபக்ச.
அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படும் போது இலங்கை பிரஜை கூட இல்லை. தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருக்கிறார். தொடர்ந்து இரட்டை பிரஜையாக இருந்து வந்த கோத்தபாய ராஜபக் ஷவிற்கு ஜனாதிபதி ஆசை வந்த பின் அமெரிக்க பிரஜாவுரிமை துறப்பதாக ஆவணம் ஒன்றை காட்டினார்.
சில தினங்களுக்கு முன்னர் மூன்றாவது காலாண்டுக்கு உரிய அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவர்களுக்கான பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இதிலும் கோத்தபாயவின் பெயர் இடம்பெறவில்லை. இப்போது பிரதானமாக இரண்டு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன. அதாவது கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை பிரஜா வுரிமையை சரியாகப் பெற்றுக்கொண்டாரா? அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமையை அவர் உண்மையிலேயே துறந்தாரா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செய லாளராக இருந்த காலகட்டத்தில் தான் போர் உச்சகட்டத்தில் இடம்பெற்றது. இந்த யுத்த வெற்றி தன்னுடையது என கோத்தபாய சார்பில் புத்தகமே எழுதப்பட்டுள்ளது. “தி கோட்டாஸ் வோர்” என்ற புத்தகத்தை எழுதி யுத்த வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
இதுநாள் வரையில் யுத்த வெற்றி தனக்கு கிடைத்த புகழ் என்று மார்தட்டியவர் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், இராணுவத் தளபதியிடம் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதை நாம் பார்த்தோம். போர் காலத்தில் இவ்வாறான அட்டூழியங்கள் நடந்தன என்பது எங்களுக்கு தெரியும். என்ன விதமாக போரை வழி நடத்தினார்கள் என்பதை எங்களது மக்கள் நன்கறிவார்கள்.
போர் முடிந்த பின்பு என்னவிதமான அடக்கு முறைகளை கையாண்டார்கள், ஊடக சுதந்திரத்தை எவ்வாறு மழுங்கடித்தார்கள் தனக்கெதிராக யாராவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அவரை என்ன விதமாக கவனித்துக் கொண்டார்கள் என்பது தெரிந்த விடயம்.
இந்த முறை அவை தொடர்பான விடயங்கள் கூடுதலாக வெளிவருகின்றன. வெள்ளை வான் கடத்தல் என்பது ஒரு சொற்பதமாகவே மாறி இருக்கிறது. இன்று இலங்கையில் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விடயமாக வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் மாறியுள்ளது. அந்த அளவிற்கு வெள்ளை வான் விடயம் பிரபலமாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இவ்வாறு காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் ஏராளமாகும். உலகத்திலே அவை பேசும் பொருளாகவே உள்ளன. ஆங்கிலத்தில் வெள்ளை வேன் கடத்தல் என்பது ஒரு சொற்பதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்த அளவிற்கு வெள்ளை வான் விடயம் பிரபலமாகியுள்ளது. கோத்தபாய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலாள ராக இருந்த காலத்தில்தான் காணி அபகரிப்பு, இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்து ஓர் ஆவணம் இருக்கிறது. தமிழ் மக்கள் குறித்து கோத்தபாய ராஜபக்ச தேர்தல் வரைபில் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாகக்கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு படி மேலாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்று காட்டுவேன் எனக் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு முடிந்தால் வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என சவால் விடுத்து இருக்கிறார்.
தமிழ்த் தேசியம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நிதானித்து கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க முடியாது என முடிவைச் சொல்லி இருக் கிறது என தெரிவித்துள்ளார்.