கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவருக்கு பொது மன்னிப்பளித்து அவர்களை வழக்கின் அரச சாட்சிகளாக பயன்படுத்த சட்ட மா அதிபர் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக அத்திணைக்களத்தின் உயர் மட்ட தகவல்கள் கேசரிக்குத் தெரிவித்தன.
வெள்ளை வேனில் 11 பேரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்று காணாமல் ஆக்கியமை தொடர்பிலான நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டமை தொடர்பில் 16 சந்தேக நபர்கள் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கைது செய்யப்படாத போதும் சந்தேக நபராக பெயரிடப்பட்டார். அதன்படி நீதிவான் நீதிமன்ற அரிக்கைகளின் பிரகாரம் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 17 ஆகும். இந் நிலையிலேயே அவர்களில் மூவரை, அவர்கள் இக்குற்றச் செயல்களின் குற்ற உதவியாளர்களாக இருந்துள்ளதை வைத்து பிரதான பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சியாளர்களாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 17 ஆவது சந்தேக நபரான கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார பிரதான அரச சாட்சியாக பயன்படுத்தப்படவுள்ளார். அவரே கன்சைட் முகாமில் குறித்த கடத்தப்பட்டவர்கள் இருந்த போது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள உதவியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனைவிட லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக தர்மதாஸ ஆகிய இரு கடற்படை உளவுப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் அரச சாட்சியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தை உடையவரும் தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளவருமான சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய, கித்சிறி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி, சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்ணாச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்னாண்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் கோரப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான நியமனம் கிடைக்கப் பெறும் என நம்பப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.