விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த இந்திய மத்திய அரசின் உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது.
அதற்கமைய கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த ஆண்டு மே மாதமும் மத்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தடையை ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை தொடரலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையில் ஒரு தீர்ப்பாயத்தை மே 27ஆம் திகதி மத்திய அரசு அமைத்தது. இந்த தீர்ப்பாயம் டெல்லியிலும் சென்னையிலும் விசாரணைகளை மேற்கொண்டது.
இதில் விடுதலைப்புலிகள் ஆதரவாளரான ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் முன்னிலையாகி வாதிட்டனர். அதன்பின்னர் தீர்ப்பாயம் கடந்த 7ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கம் மீது மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை உறுதி செய்வது என்ற முடிவுக்கு வந்ததாக டெல்லி உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் தீர்ப்பாயம் தனது உத்தரவை முத்திரையிட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு இதனை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal