சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன!

அகிம்சா விக்கிரமதுங்க

தமிழில் ரஜீபன் 

 

இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர்.  ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன்.

தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன்.

கண்டிக்கத்தக்க –  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன்.

தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன்.

இதன் மூலம் நான் சஜித் என்ற வேட்பாளர் எப்படி உருவானார் என்பதை சொல்கின்றேன்.

அவரது வேதனை அவரது போராட்டங்கள் அவரது பயணம் ஆகியன எப்படி என்னுடைய போராட்டங்கள் பயணம் வேதனை ஆகியவற்றை ஒத்தவையாக காணப்படுகின்றன என்ற உணர்வு எனக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இன்றைய சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன,இன்று உள்ள  என்னை இந்த சவால்களும் அனுபவங்களுமே உருவாக்கின.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எனது சொந்த ஆத்மாவை வடிவமைத்த அதே தீயினால் உருவாக்கப்பட்டவர்.

மற்றைய மாற்றீடான வேட்பாளர் எனது தந்தையின் மரணத்தை தொலைக்காட்சியில் கொண்டாடியவர்.

ஜனாதிபதி பிரேமதாசாவின் அர்த்தமற்ற கொலை குறித்து பிரபாகரன்கூட தம்பட்டமடிக்கவில்லை.

ஆனால் கொலைகார கும்பலொன்று எனது தந்தையை கொலை செய்தவேளை கோத்தபாயவினால் தனது மகிழ்;ச்சியை மறைக்கமுடியவில்லை.

எனது தந்தையின் கொலைக்கும் படையினருக்கும் இடையிலான  தொடர்புகள்குறித்து தெரியவந்தவேளை அவர் விசாரணைகளை மேற்கொள்வேன் என்றோ அல்லது  பத்திரிகையாளர்களை பாதுகாப்பேன் எனவோ வாக்குறுதி வழங்கவில்லை.

அவர் குற்றவாளிகளை நீதியின் பிடியிலிருந்து காப்பாற்றுவேன்  என சூளுரைத்தார்.

 

கோழைகள் மாத்திரமே இரத்தகளறியை வார்த்தைகளால் எதிர்கொள்வார்கள்.

எனது வாழ்க்கையில் கோத்தாபய எந்த சவாலையும் எதிர்கொண்டதை நான் காணவில்லை.அவருக்கு எதிராக பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் , அவர் தான் குற்றமற்றவர் என்பதை ஒருபோதும் நிருபிக்கவில்லை.

மாறாக அவர் தாமதங்கள் சட்டசிக்கல்கள் மூலம் தப்பிவெளியேறியுள்ளார்.

அவர் அதிகாரத்திலிருந்தவேளை  அவரை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர்,கொலை செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது அவர் தனது எதிர்வேட்பாளர்களை எதிர்கொள்வதையோ அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்துக்கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினால் அவர் பதிலிற்கு ஏனையவர்களை நாடுகின்றார்.

நீதியுடனான தங்களின் போராட்டங்களில் இருந்து தப்புவதற்காக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்பும் ஊடக முதலாளிகள் அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உருவாக்குகின்றனர்- தயாரிக்கின்றனர்.

நெருக்கடியான காலத்தின் போது அவர் அமெரிக்காவிற்கு தப்பியோடிவிட்டு தனது குடும்பத்தவர்கள் செங்கம்பளத்தை விரித்தவேளையே அவர் இலங்கைக்கு திரும்பிவந்தார்.

சஜித் பிரேமதாசாவை நான் பார்த்ததில்லை- அவருடன் நான் பேசியதில்லை ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போதே அவர் வித்தியாசமானவராக தெரிகின்றார்.

அவர் 2000 மற்றும் 2001 இல் அனைத்து தடைகளையும் முறியடித்து அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2003 ஜனவரி 31 ம் திகதி சஜித் பிரேமதாச பதில் சுகாதார அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையை முன்னோக்கி  நகர்த்திக்கொண்டிருந்தவேளை கோத்தபாய ராஜபக்ச இலங்கையை கைவிட்டுவிட்டு  அமெரிக்க கொடிக்கு விசுவாம் வெளியிட்ட பின்னர் அமெரிக்க கனவில் திளைத்திருந்தார்.

நீதிக்காக போராடிய எங்களை போன்ற பலரை கைவிட்டுள்ள இந்த அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போதிலும்,அவர் தனது நடவடிக்கைகள் மூலம் தன்னை வித்தியாசமானவராக காண்பிப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.

கடந்த வருடம் ராஜபக்ச சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயன்ற சதி முயற்சியின் போது தனது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு அரசமைப்பை காப்பாற்ற சஜித்பிரேமதாச போராடியதை  நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அவர் தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்காக போராடி புதிய பாதையொன்றை வகுத்தார்.

அவர் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கவில்லை.அரசியல்வாதிகள் விலகியிருக்கும் நிலையை உருவாக்கி பொலிஸாரும் தொழில்சார் வல்லுனர்களும்  தங்கள்கடமைகளை நிறைவேற்றக்கூடிய சூழலை ஏற்படுத்த முனைகின்றார்.

எங்களால் இதனைமாத்திரம் கேட்க முடியும்.

நேர்மையான, அச்சமற்ற, அர்ப்பணிப்பு மிக்க அவரை போன்ற ஒருவர் மிகச்சிறந்த ஜனாதிபதியாக விளங்க முடியும் என எனது மனதில் நான் எண்ணுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் தங்கள் பணியின் போது கோத்தபாய ராஜபக்சவுடன் மோதிய பல துணிச்சலான காவல்துறை அதிகாரிகள் , சட்டவாளர்கள், சாட்சிகள் , நீதிபதிகள் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நான் கடுமையான அச்சம்கொண்டுள்ளேன்.

கோத்தபாய ராஜபக்சவினால் தீவிரவாதத்தை தூண்டி நாட்டை தீமூட்ட முடியும்.அதன் பின்னர் அதனை தன்னால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவிப்பார்.

பத்து வருடங்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச குறித்து எனது தந்தை நாட்டை எச்சரிக்க முயன்றார்.அதற்காக அவர் மரணத்தை தழுவினார்.

நாளை கோத்தபாயவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் தந்தை, சகோதரன்,தந்தை தாய் அல்லது கணவன் மனைவி- காணாமல் போகலாம்,அல்லது மரணிக்கலாம்.

அந்த நபர் உங்களை காப்பாற்றுவார் என நம்புவதன் ஆபத்து என்னவென்றால் அவரிடமிருந்து உங்களை யாராலும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது.