ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி வழங்கும் கடிதத்தை, வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாக ஏற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வாதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றுடன், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் அடங்கிய கடிதம் ஆட்பதித்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாக்களிக்கும்போது, வாக்குச்சீட்டில் தவறிழைக்கப்பட்டால், அதற்காக மற்றுமொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தாங்கள் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளரின் பெயரும், சின்னமும் வாக்குச்சீட்டில் இருக்கின்ற நிரலை தெரிவு செய்து விசேட கவனம் செலுத்தி வாக்களிக்க வேண்டும்.
தான் வாக்களிக்க எண்ணிய குறித்த வேட்பாளருக்கு மாறாக, வேறு ஒருவருக்கு தம்மால் வாக்களிக்கப்பட்டதாக எவராவது ஒருவர் கூறுவாராயின், அவருக்கு மேலதிகமான வாக்குச்சீட்டை வழங்குவதற்கு சிரேஷ்ட தேர்தல் அதிகாரிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
எனவே, வாக்காளர்கள் தங்களது வேட்பாளருக்கு வாக்கை வழங்குவதற்கு தவறும்போது, வேறொரு வாக்குச்சீட்டை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal