இம்மாதம் 16 ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் யார்? யார்? என்பதை தேர்தல் ஆணையாளர் உங்களுக்கு தபால் மூலம் தெரிவித்திருப்பார்.
ஆகவே தேர்தல் தினத்தன்று நீங்கள் உங்களுக்கு உரித்தான அவ் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு அந்த அட்டையில் நீங்கள் எங்கே வாக்களிக்கச் செல்லவேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்போது கட்டாயம் உங்களது அறிமுகத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
1. தேசிய அடையாள அட்டை
2. செல்லுபடியான கடவுச்சீட்டு
3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
4. அரச சேவை ஓய்வு ஊதிய அட்டை
5. பிரதேச செயலாளரால் விநியோகிக்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை
6. மதகுருமார்களுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டை
7. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஒன்றை கட்டாயம் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்தின் உள்ளே நடைபெறுபவை
உங்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய நிலையம் குறிக்கப்பட்டிருப்பதால், அந்நிலையத்திற்குச் சென்றே உங்கள் வாக்கை நீங்கள் அளிக்கவேண்டும். வேறு நிலையங்களில் உங்கள் வாக்கை அளிக்க முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாக்களிப்பு நிலையத்தின் உள்ளே இருக்கும் தேர்தல் அதிகாரிகள் உங்களது வாக்காளர் அட்டையையும் உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையையும் பரிசீலனை செய்த பின்னர் உங்களுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான வாக்குச்சீட்டை வழங்குவார்கள். அவ்வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று உங்களது வாக்கை அளித்த பின்னர் அதனை வாக்குச் சீட்டுப் பெட்டிக்குள் போட வேண்டும். அத்துடன் உங்களது வாக்களிப்பு வேலை முடிவடைகிறது. அமைதியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
இனி வாக்குச்சீட்டில் நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
முக்கிய பகுதி இதுவேயாகும்.
வாக்குச் சீட்டில் அபேட்சகர்களது பெயர்கள் இருக்கும். அவர்களது சின்னங்களும் இருக்கும். ஆகவே நீங்கள் முதலில் செய்யவேண்டியது, போட்டி போடும் அபேட்சகர்களில் ஒருவருக்கா அல்லது இருவருக்கா அல்லது மூவருக்கா வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளவேண்டும். ஒருவருக்கே வாக்களிக்க விரும்பினால் வாக்குச் சீட்டில் பின்வருமாறு குறியிடலாம்.
X புள்ளடி இடுவதன் மூலம் அதனைத் தெரிவிப்பது நல்லது.
மேற்படி வாக்குச் சீட்டு பரிபூரணமானது. ஆகவே அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியானதொன்றாக எடுக்கப்படும். நிராகரிக்கப்படமாட்டாது.
மாதிரி வாக்குச்சீட்டு (2) இல் நீங்கள் ஒருவருக்கு மேற்பட்டவருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என எடுத்துக்கொண்டால் அந்த வாக்குச் சீட்டில் இலக்கங்கள் மூலமே அடையாளமிட வேண்டும். X என்று ஒருவருக்கும் மற்றையவர்களுக்கு இலக்கம் 2,3 என்பதன் மூலம் அடையாளப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.
ஆகவே நீங்கள் கவனிக்க வேண்டியது, இலக்கங்கள் மூலம் தனது வாக்குரிமையை தெரிவிக்க விரும்பினால் இலக்கங்கள் மூலமே சகலதையும் தெரிவிக்க வேண்டும். இலக்கம் மூலம் சிலவற்றையும் X என்பதன் மூலம் மற்றையவற்றையும் தெரிவிக்கக் கூடாது. அப்படித் தெரிவித்தால் அவ்வாக்கு செல்லுபடியாகாது போகும். ஆகவே கவனமாக உங்கள் வாக்கை அளியுங்கள். ஆகவே மாதிரிச் சீட்டு 2 இல் காட்டியுள்ள மாதிரி வாக்குச்சீட்டு செல்லுபடியான வாக்குச்சீட்டாகும்.
மாதிரிச்சீட்டு (3) செல்லுபடியாகாது. மாதிரிச்சீட்டு 4 உம் செல்லுபடியாகாது.
கவனத்தில் கொள்ள வேண்டியது
1. வாக்குச்சீட்டில் X என்று மட்டும் எழுதினால் அது செல்லும்
2. வாக்குச் சீட்டில் X என்றும் மற்றும் 2, 3 என எழுதினால் அது செல்லாது.
3. வாக்குச் சீட்டில் 1, 2, 3 என எழுதினால் அது செல்லும்.
4. வாக்குச் சீட்டில் XXX என மூன்று பெயருக்கு அடையாளப்படுத்தினால் செல்லாது.
விளக்கம் எதுவும் தேவையாயின் 077 6705511 க்கு Phone பண்ணி விளக்கத்தை என்னிடம் தெரிந்து கொள்ளலாம்.
– சட்டத்தரணி கே.ஜீ.ஜோன்