அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளவர் நிச்சயம் ஒரு பௌத்த சிங்கள வராகவேயிருப்பார். அதில் மாற்றமிருக்காது. குறித்த தேர்தலில் பலர் போட்டி யிட்டாலும் இருவருக்கிடையேயாகவே போட்டி நிலவுகின்றது. நாட்டின் சிறுபான்மையினத்தவரெவரும் தெரிவாகும் வாய்ப்பு அற்றபோது சிறுபான்மையினத்தவரான நாம் ஏன் இத்தேர்தலில் அக்கறை செலுத்தவேண்டும் என்ற வினா எழலாம்.
குறித்த ஜனாதிபதிப் பதவி நாட்டைப் பொறுத்தவரை சக்தி வாய்ந்தது. சகல சமூகத்தினரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்தது. இவ்வாறான ஒரு பதவிக்குத் தெரிவானவர் பொறுப்புடன் தனது ஆட்சியதிகாரத்தைச் செயற்படுத்துபவராக இருக்கவேண்டும். இனங்களுக்கிடையே பூசல், பிரச்சினைகளை ஏற்படுத்துபவராக இருக்கக்கூடாது என்ற நியாயமான சிந்தனையுடன் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின், குறிப்பாக அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினரின் பொறுப்பாகும்.
அதனால் அவ்வாறானவர் எவர் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது நமது பொறுப்பு. சிறுபான்மையினராக நாமிருந்தபோதிலும் தெரிவைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளது என்பதை கடந்தகால ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
நாட்டிலே சகல இனக்குடிமக்களும் நாடாளும் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் சமத்துவ அதிகாரம் கொண்ட ஒரு நாளாக ஜனாதிபதித் தேர்தல் தினம் அமைகின்றது. வாக்குச்சீட்டின் பெறுமதியை, அதற்குரியவரின் அதிகாரத்தை, சக்தியை வெளிப்படுத்தும் நாளாக அந்நாள் உள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்து அதாவது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து, நாட்டின் சுதேசிய பெரும்பான்மையினத்தவருக்கு ஆட்சி கைமாறி எழுபத்தியொரு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள இந்நிலையில் இந்நாட்டின் சிறுபான்மையினத்தவர்கள் சுதந்திரக் காற்றை முழுமையாகச் சுவாசிக்கும் நிலையில் இல்லை என்ற கசப்பான உண்மையை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. அது மட்டுமல்ல மேலும் பல அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன. இறுதியில் குறித்த இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஆறு இலட்சம் பேர் இரு நாடுகளாலும் 1964 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ ––சாஸ்திரி ஆட்கடத்தல் அல்லது நாடு கடத்தல் என்று குறிப்பிடக்கூடிய மனித ஏற்றுமதி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் நாட்டின் குடிமக்களாக ஏற்கப்பட்டனர். ஆனால் நாட்டின் ஏனைய சமூகங்கள் குறிப்பாக பெரும்பான்மைச் சமூகங்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியாத கட்டுப்பாடுகளுடனேயே வாழும் நிலையிலுள்ளனர்.
இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மலையகத்திலிருந்து பத்துப் பிரதிநிதிகளை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தெரிவு செய்யக்கூடியதாகத் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தமிழர் மத்தியிலே நிலவிய போட்டியால் எட்டுப்பேரே தெரிவு செய்யப்பட்டனர். அப்புத்தளை மற்றும் பலாங்கொடை இரட்டை அங்கத்தவர் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு தமிழர்கள் வாக்குகளைப் பிரித்ததால் தமிழர் வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளைப் பெற்ற சிங்களவர் இருவர் தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 95 உறுப்பினர்களில் 10 பேர் மலையகத்திலிருந்து தமிழர்கள் தெரிவு செய்யப்படக்கூடியதாக அன்று இருந்தது. இன்று 225 பேரில் 8 பேர் மட்டுமே தட்டுத்தடுமாறித் தெரிவாகியுள்ளனர். தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாது முழு உரிமையுடன் இருந்திருந்தால் நிலைமையில் மாற்றமிருந்திருக்கும்.
எது எவ்வாறிருந்த போதிலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமும் வாக்களிக்கத் தகைமை பெற்றுள்ளோம். அந்தப் பெறுமதிவாய்ந்த வாக்கை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில் சிந்தித்துச் செயற்படவேண்டும். நமது அரசியல் தலைவர்கள் என்போர் பிளவுபட்ட நிலையில், ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். அவர்கள் தாம் அண்டி நடக்கும் அரசியல்வாதி அதாவது வேட்பாளரின் வெற்றியின் பின்னர் அவரது ஆட்சியில் அமைச்சர் பதவிகளைப் பெறலாம் என்ற நோக்கமும் அடங்கும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அதில் தவறில்லை.
ஆனால் வாக்களிக்கும் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. தம்மை இந்நாட்டின் உரிமையுள்ள மக்களாக யார் மதித்து ஏற்று நடப்பார்கள் என்பது முதன்மையானதாகும். பொதுவாக நோக்கும்போது இது காலவரை சிறுபான்மை மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் எவருக்கோ வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். அடிப்படை வாழ்வுரிமைகள் மதிக்கப்படவில்லை.
மலையகத் தமிழ் மக்கள் குறிப்பாகப் பெருந்தோட்டத்துறை சார் மக்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறமுடியாத நிலையிலுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டார்கள். அது கிடைக்கவில்லை. ஐம்பது ரூபா பெற்றுக் கொடுப்போ மென்றார்கள் அதுவும் இல்லை. தீபாவளி முற்பணமாக மேலும் ஐயாயிரம் பெற்றுக் கொடுப்போமென்றார்கள் அதுவும் இல்லை. இப்போது தமக்கு வாக்களித்தால் நாட் சம்பளம் ஆயிரம் ரூபா தருவதாக ஒருவரும் சொல்லவில்லை. நான் ஆயிரத்து ஐநூறு ரூபா தருவேன் என்று ஒருவர் சொல்கிறார். தோட்டத் தொழிலாளரைப் பலரும் குழப்புகின்றனர். காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
வீட்டுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை, தொழில்உரிமை, பாதுகாப்பு உரிமை என்று பல உரிமைகளைப் பெறவேண்டிய நிலையிலுள்ள தமிழர்கள், குறிப்பாக மலையகப் பெருந்தோட்டத் தமிழர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் வாக்களிக்கின்றனர். எதிர்காலத்திலாவது வழங்கப்படும் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் தமிழர் தரப்பின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும். தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கும் தரகர்களாக மட்டும் இருந்து விடக்கூடாது.
வாக்குரிமை என்பது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை. அதைப் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு. வாக்குக்காக மட்டும் நம்மை நாடி வராது உண்மையான நேர்மையான எண்ணத்துடன் நமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று ஒருவரை நாம் அடையாளம் காண்கின்றோமோ அவருக்கு– அவரது சின்னத்திற்கு நமது வாக்கை அளிக்கவேண்டும். இருந்திருந்து ஒரு நாள் நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் –வாக்களிக்கும் வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்தி நமது சக்தியை வெளிப்படுத்தவேண்டும்.
பணத்திற்கும், மதுவுக்கும், மிரட்டல்களுக்கும் அடிபணியாது மனச்சாட்சியின் படியும் கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தும், சிந்தித்தும் நமது பெறுமதியான வாக்கைச் சரியான முறையில் அளிப்போம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்பபோம்.
த.மனோகரன்