விராட் கோலியையும் தன்னையும் யாரென்றே தெரியாமல் ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது விராட் கோலியையும், தன்னையும் யாரென்றே தெரியாத ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அனுஷ்கா சர்மா கூறியிருப்பதாவது:
”இன்று, எங்கள் 8.5 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்தின்போது, பிறந்த நான்கு மாதங்களே ஆன கன்றுக்குட்டியைக் கொஞ்சுவதற்காகவும், அதற்கு உணவு தருவதற்காகவும் மலையில் ஒரு சிறிய கிராமத்தில் நிறுத்தினோம்.
அப்போது அந்த வீட்டின் உரிமையாளர், நாங்கள் சோர்வடைந்து இருக்கிறோமா, தேநீர் வேண்டுமா என்று கேட்டார். அதனால் நாங்கள் அழகான, அன்பான குடும்பம் இருக்கும் அந்த வீட்டுக்குள் சென்றோம். அவர்களுக்கு நாங்கள் யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் எங்களை அன்போடு நடத்தினார்கள்.
அவர்களுடன் தேநீர் அருந்தி, சில நிமிடங்கள் பேசினோம். பேசி முடிக்கும் வரை எங்களை மலையேறிச் சோர்வடைந்த இரண்டு நபர்கள் என்றே பார்த்தார்கள். இப்படியான உண்மையான, எளிமையான, தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோலியும் வாழ்கிறோம் என்பதை எங்கள் இருவரின் நெருக்கமானவர்களுக்கும் தெரியும்.
எதையும் எதிர்பார்க்காமல் இரண்டு அந்நியர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் நினைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை நாங்கள் என்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுவோம்.”
இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.