ஆஸ்திரேலியா: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக குழந்தைகள் உள்பட 353 தஞ்சக்கோரிக்கையாளர்களை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மேதெம் ரதி என்ற 43 வயது ஈராக்கியருக்கு பிணை (ஜாமீன்) மறுத்துள்ளது ஆஸ்திரேலிய நீதிமன்றம்.
பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறி பிணை மறுக்கப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு நடந்த இந்த ஆட்கடத்தல் சம்பவத்தில் 353 பேரும் கடல் மூழ்கி இறந்தது, அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த ஈராக்கியர், நியூசிலாந்தில் இருந்த நிலையில் ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அயல்நாட்டிடம் குற்றவாளியை ஒப்படைக்கும் நடைமுறையின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு ஆட்கடத்தலை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் செல்வதைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இக்கைது ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகின்றது.