உலகில் வாழும் 90 சதவீதம் மக்கள் கெட்ட காற்றையே சுவாசித்து வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 92 சதவீதம் பேர் மாசுபாடு நிறைந்த காற்றையே சுவாசித்து வாழ்வதாக கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு நாம் நினைப்பதுபோல் இல்லாமல் பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்தான் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய அளவில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார அமைப்பினர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிக்கையில் உள்ள முக்கிய கண்டுபிடிப்புகளை சுட்டிக்காட்டிய உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்சார்ந்த பிரிவின் தலைவரான மரியா நீரா, காற்றுமாசினால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் மக்கள் பலியாவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் 90 சதவீதம் மரணங்கள் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் நிகழ்வதாக இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 92 சதவீதம் பேர், உலக சுகாதார அமைப்பால் அனுமதிக்கப்பட்ட 2.5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான மாசுகலந்த கெட்ட காற்றையே சுவாசித்து வருவதாகவும் பொது இடத்தில் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள காற்றுமாசைவிட, வீடுகளுக்குள் நிலக்கரி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, வடகிழக்கு ஆசியாவின் சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த பாதிப்பை மக்களின் சுகாதாரம்சார்ந்த அவசரநிலையாக கருதி, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.