விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலையியற் கட்டளை இலக்கம் 16ற்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய அன்றைய தினம் ‘விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அத்துடன் தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெறும் அமர்வின் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதியே நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
நேற்று சபையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ‘விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலையில் விசேட தன்மைகளை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை நிறைவேற்ற சபையில் ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மஹிந்த அணியினராக செயற்படும் சகலரும் தமது ஆதரவை தெரிவித்தனர்.
அதற்கமைய அவசரமாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டம் கூடியது. இதன்போதே அவசரமாக எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதியே வழைமையான நாடாளுமன்ற அமைர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.