இழுத்தடிப்பு நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றன. தனித்தனி அறிவிப்புக்களாகவே இவைகள் வெளிவந்துள்ளன. ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று கூறியிருந்தது.
தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவளிப்பது என்று உறுதி யாகத் தீர்மானித்து, ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
ஆனாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளுடனும், தமிழரசுக் கட்சி கலந்தாலோசித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன என்பது அறிவிக்கப்படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய ஆர்.சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி யின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ள தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலில் வேறு ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கட்சியினால் எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு முரணான வகையிலோ அல்லது அதற்கு மாறான முறையிலோ வேறு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்பது கட்சிக் கொள்கைக்கு விரோதமானது. கட்சி அரசியல் என்ற ரீதியிலும் கட்சியின் நலன்கள் என்ற ரீதியிலும் அது பொருத்தமற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவு குறித்து தமிழரசுக் கட்சி கூடி ஆராய்வதற்கு முன்பே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளாகிய ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு அப்பால், இறுக்கமான ஓர் அரசியல் சூழலில் இரண்டு முக்கிய வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சி எடுப்பது என்பதை ஒரு சாதாரண விடயமாகக் கொள்ள முடியாது.
பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்ற வகையில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியாக மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஒரு முடிவெடுப்பது என்பதையும் சாதாரண விடயமாகக் கருத முடியாது.
ஓர் அரசியல் கட்சி என்ற ரீதியில் அதி லும் பழம்பெரும் அரசியல் கட்சி என்ற வகை யில், தமிழரசுக் கட்சி இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியாக ஒரு தீர்மானம் எடுப்பதை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. அது அந்தக் கட்சியின் அரசியல் உரிமை. அதைத் தடுக்கவும் முடியாது.
இக்கட்டான சூழலில் தமிழ் மக்கள்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வெற்றி அடையச் செய்திருந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் இக்கட்டான ஒரு நிலைமைக்குள் வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதனால், தமிழர் தரப்பு ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமானதோர் அரசியல் சூழலுக்குள் அவர்கள் இழுத்து வரப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே, இக்கட்டான நிலைமையிலும் வலிந்து தள்ளப்பட்ட ஒரு நெருக்கடியான சூழலிலும் உள்ள தமிழ் மக்கள் சார்பாகத் தமிழரசுக் கட்சி எடுக்கின்ற ஒரு தீர்மானம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைகின்றது. அதிலும் தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சி எடுக்கின்ற முடிவும் தீர்மானமும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது, முக்கியத்துவம் பெற்றதாக அமைகின்றது.
யுத்த வெற்றியிலும் இனவாதப் போக்கிலும் திளைத்திருந்த மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முனைப்புடன் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதை உணர்ந்திருந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புக்களுடன் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கைகோர்த்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தது.
யுத்த வெற்றிவாதத்தின் ஊடாக சர்வாதிகாரப் போக்கில் சென்ற அரசாங்கத்தைத் தோற்கடித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த ஜனநாயகத்துக்குப் புத்துயிரளிக்க வேண்டும். ஊழல்கள், மோசடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். சர்வாதிகாரத்துக்கு வழிகோலியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காகப் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். தேர்தல் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். நீண்ட காலமாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினைக்குப் புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற அரசியல் தேவைகளுக்காக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ அணியினரைத் தோற்கடித்து, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆட்சி மாற்றத்துக்கான முயற்சியில் தமிழ் மக்களின் நலன்கள் சம்பந்தப்பட்டிருந்தன. அவர்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதம் வெளிப்படையாகக் கிடைத்திருந்தது. குறிப்பாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குப் புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப்பெற்றிருந்தது என்ற நம்பிக்கை அப்போது துளிர்த்திருந்தது.
இதனால் ஆட்சி மாற்றத்துக்கும், ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஒத்துழைப்பது என்றும் முடிவெடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது. இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் உருவாகிய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்களையும் எதிர்பார்த்த வகையில் நிறைவேற்றவில்லை. சில, சில விடயங்களில் அக்கறையும் கவனத்தையும் செலுத்தியிருந்த போதிலும், தமிழ் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கையையும் சிதறடித்துவிட்டது.
இனவாதமே தேர்தலின் அடிநிலை ஆதாரம்
இத்தகைய பின்புலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இனவாதமே மேலோங்கி உள்ளது. கடந்த தேர்தலில் சர்வாதிகாரத்துக்கு எதிரான போக்கும், ஜனநாயகத்தைப் பேண வேண்டும் என்ற அரசியல் நோக்கமும் உத்வேகம் பெற்றிருந்தது. ஆனால் இந்தத் தேர்தல் அவ்வாறானதல்ல. இது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற அதிகார மோகத்துடன் கூடிய அரசியல் நோக்கத்தையே முனைப்பாகக் கொண்டிருக்கின்றது.
கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய மஹிந்த ராஜபக் ஷ குடும்பம் தனக்கு இசைவான அரசியல் போக்குடையவர்களை இணைத்துக்கொண்டு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் எப்படியாவது ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ குழுவினரின் செயற்பாடுகளினால், இந்தத் தேர்தல் இனவாதப் பிரசாரத்தை நிலைக்களனாகக் கொண்டதாக மாறியுள்ளது, இன வாதத் தேர்தல் களமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அடிநிலை ஆதாரமாக உள்ள பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக இனவாத பிரசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களாகிய மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வராகிய சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. அவர்களுடைய தேர்தல் வெற்றி இனவாத பிரசாரத்தையும் இனவாத நிலைப்பாட்டையுமே நிலைக்களனாகக் கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே தமிழ்க்கட்சிகளின் தேர்தல் கால கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்திருந்தனர். அந்தக் கோரிக்கைகளை தமிழர் தரப்பின் இனவாத கோரிக்கைகளாக வர்ணித்து அவற்றை நிராகரித்திருந்தனர். அந்தக் கோரிக்கைகள் தென்னிலங்கை அரசியல்வாதிகளினாலும் அரசுகளினாலும் பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளைவிட கடுமையானவை என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே தமிழ் மக்கள் தரப்பில் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை ஏற்கவோ அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதற்கோ முடியாது என்று பிரதான வேட்பாளர்கள் இருவரும் முற்றாக மறுத்துவிட்டார்கள். அவர்களைப் பின்பற்றி ஜே.வி.பி.யும் அரைகுறையாக அந்தக் கோரிக்கைகளை நோக்கியிருந்தது.
பேச்சுக்கள் சாத்தியமாகவில்லை
சிங்கள மக்களின் வாக்குகளைக் கூடுத லாகப் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே இலக்கில் செயற்படுகின்ற பிரதான வேட்பாளர்கள் இருவருமே அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திசை திருப்புவதற்காக இனவாதத்தைக் கையில் எடுத்திருக்கின்றனர். யார் ஒருவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து, அவற்றைக் கவனத்தில் எடுக்கின்றாரோ அவர் விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுக்க முற்படுகின்றார் என திரித்துக் காட்டி சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் பிரசார உத்தி இந்தத் தேர்தலில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இத்தகைய தேர்தல் கள நிலைமை காரணமாகவே, பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவரை ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டி வந்தது. கால தாமதம் செய்து வந்தது. ஒரு வேட்பாளரை ஆதரித்தால் மறு வேட்பாளர் அதனை இனவாதப் பிரசாரத்துக்கு ஆதாரமாகக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கைக் குலைத்துவிடுவார் என்பதற்காகவே கூட்டமைப்பு இவ்வாறு செயற்பட நேர்ந்திருந்தது.
ஆனாலும் தேர்தலில் வெற்றியடைவதற்கு 51 வீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுடன் ஜே.வி.பி.யின் வேட்பாளரும் சிங்கள மக்களுடைய வாக்குகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்ற கள நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலையில் முதல் சுற்றில் 51 வீதத்தைப் பெறத்தவறினால் இரண்டாம் சுற்றில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அமையும்.
இதனால் திரட்சி பெற்ற நிலையில் அமையுமானால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற பலத்தைக் கொண்டிருக்கும் என்பது இந்தத் தேர்தலின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தமிழ்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த முயற்சியில் முதலில் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்தன. ஆயினும் ஒரு கட்சி அந்த இணைவில் இருந்து விலகியதனால் ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டிணைவாக அது மாறியது. அந்தக் கூட்டணி நிலைமைகளை ஆராய்ந்து 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர்களுடன் பேச்சுக்களை நடத்த முற்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை.
குழப்ப நிலையிலான தீர்மானங்கள்
இந்த நிலையில் தமிழ் மக்கள் தாங்கள் விரும்பியவாறு இந்தத் தேர்தலில் வாக்களிக்கலாம் என ஐந்து கட்சிகளும் இணைந்து தீர்மானித்திருந்தன. அந்தத் தீர்மானத்தை ஐந்து கட்சிகளில் ஒன்றாகிய தமிழ் மக்கள் கூட்டணி ஒரு நாள் முந்திக் கொண்டு மக்களுக்கு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து கட்சிகளின் தீர்மானமாகவும் அது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சியின் செயற்குழு வவுனியாவில் கூடி, பல மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதித்த பின்னர், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையாக ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கமைய தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற தேர்தல் கால நிலைப்பாட்டை மீறிய செயலாகியுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு நிலைப்பாட்டையும் மீறிய செயலாகவே இதனை நோக்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிக்கல்கள் மிகுந்த இந்த ஜனாதிபதித் தேர்தல் சூழலில் அதன் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சியின் தனித்துவமான தீர்மானமானது, கூட்டமைப்பின் கூட்டிணைவையும் மீறியதாகவே அமைந்துள்ளது.
தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தைப் பேணுவதற்காக எத்தகைய முடிவையும் மேற்கொள்ள முடியும். அது அதன் அரசியல் அடிப்படை உரிமை. ஆனால் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு அதன்படி செயற்பட வேண்டும். அதற்கமைய தமிழ் மக்களை வழிநடத்த வேண்டும் என்ற கட்டாயமான அரசியல் சூழலில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் வெளியிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரிப்பதற்கே வழி சமைத்துள்ளது.
மிஞ்சுவது என்ன?
அரசியல் கட்சி என்ற ரீதியில் தனித்துவமான தனது தீர்மானத்தை தமிழ்த்தேசிய கூட்டமைபப்புக்குள்ளே கொண்டு வந்து ஏகமனதாக முடிவெடுத்து கூட்டமைப்பின் தீர்மானமாக வெளிப்படுத்தியிருந்தால் அதற்கு மக்கள் மத்தியில் தெளிவான ஒரு நிலைப்பாட்டைப் புலப்படுத்தி இருக்கும். ஆனால் கட்சியளவில் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டு அதனை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் வெளியிடப்படும் என்பது தமிழரசுக் கட்சி தனது தீர்மானத்தை கூட்டமைப்பினுள்ளே திணிக்கின்ற ஒரு செயலாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழரசுக்கட்சி தனது தீர்மானத்தை வெளியிட்ட உடன் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ரெலோ அந்தத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அந்தக் கட்சியின் செயலாளர் சிறிகாந்தா சீற்ற உணர்வுடன் தெரிவித்துள்ளார். தமிரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற இரண்டு தினங்களின் பின்னர் நடைபெறுகின்ற அந்தக் கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் தமது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தத் தலைமைக்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதை முன் கூட்டியே நிச்சயமாகக் கூற முடியாது. ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப் பிற்குள்ளே இந்தத் தேர்தல் குறித்து முடிவு செய்வதில் ஒரு முரண்பாடான நிலைமை உருவாகுவதற்குத் தமிழரசுக் கட்சி மேற் கொண்ட தீர்மானம் பற்றிய அறிவித்தல் வழி வகுத்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் கூட்டமைப்பின் மற்றுமொரு கட்சியாகிய புளொட் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டையே தனது முடிவாகக் கொண்டிருக்கும் என்பதற்கான அறிகுறியே வெளிப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களை வழிநடத்த வேண்டும் என்ற தேர்தல் கால நெருக்கடி சூழலின் தேவையை தமிழ்க் கட்சிகள் ஆறு கட்சிகளாகவும் அடுத்து ஐந்து கட்சிகளாகவும் ஒன்றி ணைந்ததன் பின்னரும் சரியான முறை யில் நிறைவேற்றவில்லை என்பதையே கள நிலைமைகள் காட்டுகின்றன.
இந்த நிலைமையானது தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றவில்லை என்ற குறை கூறலுக்கே ஆளாக்கியுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு சக்திமிகுந்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தையும் அரசியல் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால அரசியல் தேவையை இக்கட்டான இந்த அரசியல் சூழலிலும் பொறுப்போடு நிறைவேற்றத் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஆளாகியிருப்பதையே காண முடிகின்றது.
பி. மாணிக்கவாசம்