மிதவைப் படகொன்றில் கடலில் சுமார் இரு நாட்களாக அலைக்கழிந்த பெண் சுற்றுலாப் பயணியொருவர் இனிப்புகளை உண்டு உயிர்பிழைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்தைச் சேர்ந்த குஷிலா ஸ்டெயின் என்ற 45 வயதுப் பெண்ணே கிரேக்கத் தீவான கிரெட்டிற்கு அப்பால் ஏஜியன் கடலில் அலைக்கழிந்து கொண்டிருந்த படகிலிருந்து 37 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இதன்போது தன்னிடமிருந்த லொலி என அழைக்கப்படும் வேகவைத்த இனிப்பு தின்பண்டங்களை உண்டும் கடும் குளிரைத் தாங்கிக்கொள்வதற்கு பிளாஸ்டிக் விரிப்பால் உடலைப் போர்த்தியிருந்தும் உயிர் பிழைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் தன்னை மீட்புப் பணியாளர்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள வசதியாக அவர் தனது தலையைச் சுற்றி சிவப்பு நிற பையொன்றை கட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலைச் செலுத்துவதில் அனுபவம் பெற்றவரான குஷிலா, மைக் என அழைக்கப்படும் பிரித்தானியருக்கு தென் துருக்கியிலிருந்து கிரேக்க ஏதென்ஸ் நகருக்கு சொகுசு கப்பலொன்றை செலுத்த உதவிய பின்னர் மிதவையில் கிரேக்கத் தீவான பொலகன்ட்ரொஸிற்கு பயணிக்க முயற்சித்த வேளையில் கடும் காற்றுக் காரணமாக அவரால் எடுத்து வரப்பட்ட துடுப்புகள் கடலில் விழுந்தமையால் அவர் பயணித்த மிதவைப் படகு கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு அவர் கடலில் திக்குத் தெரியாது அலைக்கழிய நேரிட்டுள்ளது
தான் உயிர்பிழைப்பது சாத்தியமற்றது என அஞ்சிய குஷிலா தனது தாயாரின் பெயரையும் அவரைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்களையும் தனது மிதவையின் ஒரு பக்கத்தில் எழுதி வைத்துள்ளார்.
அவரைத் தேடும் நடவடிக்கையில் 6 கப்பல்கள் மற்றும் படகுகளும் உலங்குவானூர்தியொன்றும் கடலுக்கு கீழாக பயணிக்கும் ஆளற்ற நீர்மூழ்கி உபகரணமொன்றும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவர் கிரெட் தீவின் வடக்கே 101 கிலோமீற்றர் தொலைவில் கிரேக்க கரையோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.