அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை பாகிஸ்தான் நசுக்குவதாகவும், அந்த நாடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து ஐ.நா.வில் எழுப்பி வரும் பாகிஸ்தான், கடந்த 29-ந்திகதி பாதுகாப்பு கவுன்சிலிலும் இது தொடர்பாக குற்றம் சாட்டியது. குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி பேசினார். இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான நிரந்தரக்குழு செயலாளர் பாலோமி திரிபாதி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அந்த நாடு மீது மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி னார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச அளவிலான கூட்டு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒரேயொரு உயர்மட்டக்குழுவினர் (பாகிஸ்தான்) மட்டும் எங்கள் நாட்டு பெண்களின் உரிமை குறித்து பேசுகின்றனர். ஆனால் இந்த குழுவினர் ஒரு நடைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பயங்கரவாதத்தை தூண்டுவதும், பிற்போக்குத்தனமான பயங்கரவாத சித்தாந்தங்களை போதிப்பதும், மலிவான அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை நசுக்குவதுமே அவர்களின் நடைமுறை ஆகும். இதனால் எங்கள் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் பல தலைமுறை பெண்களும், அவர்களின் குடும்பங்களும் சீரழிந்துள்ளன.
ஐ.நா.வின் பல்வேறு மன்றங்களிலும், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி குற்றச்சாட்டுகளை கூறுவதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுத்து வருகிறோம். அதேநேரம் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளில் ஐ.நா. மன்றங்களும் கவனம் செலுத்தவில்லை. இதையே தொடர வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பயங்கரவாதிகள் ஏவி விடும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை பொது வாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் அடிமைப்படுத்துவது தொடர் கின்றது.
இவ்வாறு பாலோமி திரிபாதி தெரிவித்தார். ஐ.நா. அமைதிப்படையில் பெண்களின் பங்கேற்பால் ஏற்பட்டுள்ள நேர்மறைவான விளைவுகளை சுட்டிக்காட்டி பேசிய பாலோமி திரிபாதி, எனினும் ஐ.நா. படைகளில் குறைவான விகிதத்திலேயே பெண்கள் இருப்பது குறித்து வருத்தமும் வெளியிட்டார்.