இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மைச் சமூகங்களும்!

இலங்கை தமிழரசு கட்சியிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவையடுத்து சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

 

சில தமிழ் அரசியல்வாதிகள் பரிந்துரைப்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலையாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது தேர்தலில் பங்கேற்காமல் விலகியிருக்கலாம் என்று ஆலோசனை கூறக்கூடிய சாத்தியப்பாடு முனனர் இருந்தது.

காணாமல்போனோரைக் கண்டறிவதிலும் குடிமக்களின் காணிகளை திருப்பிக்கையளிப்பதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகர்வதிலும் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து தமிழச்சமூகம்  கடுமையாக கோபமடைந்திருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைக்கு நேரடியாக பதில் தருவதற்கு இரு பிரதான வேட்பாளர்களும் தயாரில்லாமல் இருக்கின்றமை தொடர்பிலும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் பல பிரிவுகள் மத்தியில் கோபம் இருக்கிறது.ஆனால், ஆனால், அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை நோக்கினால், அவற்றில் தீீர்க்கமான பதில் ஒன்று இருப்பதை அவதானிக்கமுடியும்.

இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆகியவை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளை தெளிவுபடுத்தி மகஜர் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தன.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வு, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்தல், தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்தல்,இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுரீதியான வாழ்விடமாகவும் பாரம்பரிய தாயகமாகவும் அங்கீகரித்தல், தமிழ் தேசத்தின் இறைமையை ஏற்றுக்கொண்டு சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துயைவர்கள் என்பதை அங்கீகரித்தல் என்பவை உட்பட 13 கோரிக்கைகள் அந்த மகஜரில் உள்ளடங்கியிருக்கின்றன. இவற்றில் பல கோரிக்கைகள் குறிப்பாக சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக அமைகின்ற — நெருக்கமான போட்டியுடைய தேர்தலின் பின்புலத்தில் மிகவும் சர்ச்சைக்குரியவையாகும்.

எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தீர்மானத்தை எடுக்கும்  விடயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு பிரமாணங்களை பயன்படுத்தியிருக்கவேண்டும்.முதலாவது, தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைப் பெருமளவுக்கு கொண்டிருக்கும் கடந்த கால நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது.கடந்த கால நடவடிக்கைகளும் சிந்தனைகளும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கமுடியும்.இரண்டாவது, முன்னணி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களை நோக்குவதும் இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, அவர்களின் வாக்குறுதிகளை மதிப்பிடுவதுமாகும்.

கடந்த ஐந்து வருட காலத்தில், சஜித் பிரேமதாச அமைச்சரவை உறுப்பினராக இருந்துவந்திருக்கும் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை, பெருமளவு உறுதிமொழிகளை வழங்கியிருக்கிறது.உள்நாட்டுப்போருக்கான காரணங்களை கவனத்திற்கெடுத்து பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இனநெருக்கடிக்கு தீர்வுகாணக்கூடிய புதிய அரசியலமைப்பும் அந்த உறுதிமொழிகளில் அடங்கும்.கடந்த காலத்தில் நடந்தவைக்கு பொறுப்புக்கூறுவதுடன் இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவானதாகவே இருந்தது.அதன் விளைவாக, அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. என்றாலும், கடந்த ஐந்து வருடகாலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய பயம் கணிசமானளவுக்கு குறைந்திருந்தது.

மறுபுறத்தில், கோதாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.பிரதானமாக தமிழ்ப்பகுதிகளில் இடம்பெற்ற போர் அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. போரின் இறுதியில், அப்போது பதவியில் இருந்த அரசாங்கம் பரந்தளவிலான தேசிய பாதுகாப்பு கட்டமைப்புக்குள் அரசியல் உரிமைகளையும் விட பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது.அதன் விளைவாக ஆட்சிமுறையில் பலம்பொருந்திய இராணுவ ஈடுபாடு காணப்பட்டது.அதனுடன் சேர்ந்து பயமும் எதிர்ப்புணர்வும் தோன்றியது.இந்த கடந்த காலம் எந்தளவுக்கு எதிர்காலத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை முக்கிய கேள்வியாகிறது.கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான பாலம் இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் பிரசாரங்களிலும் குறிப்பாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் நோக்கப்படும். அந்த விஞ்ஞாபனங்களே கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய அவர்களின்  அபிப்பிராயமாகவும் மதிப்பீடாகவும் இருக்கவேண்டும்.

கலாநிதி ஜெகான் பெரேரா