இணையத்தில் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு, மாதவன் நடிக்கவுள்ள படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானார்.
அமோசன் ப்ரைமில் ‘அலெக்ஸ் இன் வுண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அலெக்ஸாண்டர் பாபு. மேலும், யூடியூப் பக்கத்தில் தனியாக சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இவர் தனியாகச் செய்யும் காமெடி நிகழ்ச்சிகள் யாவுமே இணையத்தில் மிகவும் பிரபலம்.
தற்போது புதுமுக இயக்குநர் திலீப் இயக்கத்தில் மாதவன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். ‘ராக்கெட்டரி’ படத்தின் பணிகள் அனைத்தையும் மாதவன் முடித்தவுடன் இப்புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் அலெக்ஸாண்டர் பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அலெக்ஸாண்டர் பாபு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நடிகர் மாதவன் மற்றும் இயக்குநர் திலீப்புடன் மழை பெய்து வரும் கொச்சியில் சில நாட்கள் கழித்தேன். இந்த பெரிய, விசேஷமான படத்தின் மூலம் நிறைய கற்று வருகிறேன். அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நெட் ஃபிளிக்ஸில் பிரபலமான ‘கல்கி’ குறும்படத்தை இயக்கியவர் திலீப் என்பது நினைவு கூரத்தக்கது.