போரின் போதும், அதற்கு பின்னரும் வலிந்து நபர்களை காணாமலாக்கிய மஹிந்த தரப்பினரிடம் தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க முடியாது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் இருந்து நிவாரணத்தினை எதிர்பார்க்கவில்லை மாறாக உண்மையான தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்த காலத்தில் காணாமல் போனோரை எவ்வாறு கொண்டு வருவது என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை காணாமலாக்கப்பட்டுள்ளோரது உறவினர்களது எதிர்பார்ப்பினை அவமதிப்பதாகவே கருதப்படும். யுத்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் நபர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளமை சாதாரணமாகவே காணப்பட்டுள்ளது. ஆகவே நபர்களை காணாமலாக்கிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடம் காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் நீதியை எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. காணாமலாக்கப்பட்டோருக்கும், அவர்களை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
காணாமலாக்கப்பட்டோரது உறவுகளுக்கு அரசாங்கம் நிவாரணத்தினை மாத்திரம் வழங்கினால் தீர்வு கிடைத்து விடும் என்பது தவறாகும். காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் அரசாங்கத்தின் நிவாரணங்களை எதிர்பார்க்கவில்லை மாறாக தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை உண்மையாக அறிந்துக் கொள்ளவே போராடுகின்றார்கள். அது அவர்களின் உரிமையாகும்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கும், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் நீதி கிடைக்கும் பொறிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. யுத்த குற்ற விசாரணைகள் சுயாதீனமான முறையில் இடம் பெற வேண்டும். அந்த விசாரணைகள் இராணுவத்தினருக்கு மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பின் மீதும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே நியாயமானதாகும்.
10 வருட ஆட்சி காலத்திலும் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் செயற்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தற்போதும் தமிழ் சமூகத்தின் விடயத்தில் எவ்விதமான மாற்றங்களையும் முன்னெடுக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தருணத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக பகிரங்க கருத்துக்களும், தனி பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் எதிர்பார்த்த போக்கும் நன்கு புலப்படுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபருக்கு தமிழ் அரசியல்வாதிகள் இன்றும் ஆதரவாக செயற்படுவது தன் இனத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின்மையினை வெளிப்படுத்துகின்றது.
தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மாத்திரமே இலங்கையர் அனைவருக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது. பிற உரிமைகளில் இனங்களுக்கிடையில் பெயரளவில் காணப்படுகின்றது. இந்நிலைமை முதலில் மாற்றம் பெற வேண்டும். இனமத மொழி பேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத புதிய அரசியலமைப்பு எமது ஆட்சியில் உருவாக்கப்படும். அரசியலமைப்பு மக்களின் தேவைகளுக்காக காணப்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் அரசியல் பகைமைகளுக்கு பயன்படுத்தும் ஆயுதமாக காணப்பட கூடாது. அரசியலமைப்பில் செய்துக் கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிர சாரங்கள் மக்களுக்கு ஊடகங்கள் ஊடாக முழுமையாக சென்றடைகின்றதா என்பது சந்தேகத்திற்குரியது. தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்லாமல் வழங்கும் வாக்குறுதிகள் எவ்வாறு அவர்களால் நிறைவேற்றப்படும். நேரடியாக மக்கள் மத்தியில் சென்று எமது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றோம். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் முறையற்ற சுயநல அரசியல் நிர்வாகத்தினாலே நாடு அனைத்து துறைகளிலும் தோல்விடைந்துள்ளது. சிறந்த நிர்வாக கட்டமைப்பினை முன்னெடுத்து செல்ல எம்மால் முடியும். மக்கள் அரசியல் ரீதியில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என்றார்.