இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல காத்துக் கொண்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேர் இன்(Far Inn) என்னும் தங்கும் விடுதியில் இருந்த இவர்கள் அங்கு ஒருவாரமாக மூன்று வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதை விடுதி நிர்வாகம் காவல்துறைக்கு தெரிவித்திருந்த நிலையில், 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம், போதிய ஆதாரம் இல்லாததால் குடிவரவுச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறியுள்ளார் சிலாபம் காவல்துறை தலைவர் சேனரத்ன எடிரின்சிங்கே.
இதில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மட்டகளப்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் கூட்டணி அரசாங்கம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியேற்ற விடமாட்டோம் எனக் கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.