கிரேக்கத்தைச் சேர்ந்த 92 வயது பெண்ணொருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஸிகளிடமிருந்து தன்னால் காப்பாற்றப்பட்ட இரு யூத உடன்பிறப்புகளை முதல் தடவையாக 7 தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் கழித்து சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஜெருசலேமிலுள்ள இன அழிப்பு ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறிப்பிட்ட கிரேக்கப் பெண்ணும் அவரால் காப்பாற்றப்பட்ட உடன்பிறப்புகளும் உணர்வுமேலீட்டால் கண்ணீர் சிந்தி அழுதனர்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் இளவயதினராக இருந்த மெல்பொமெனி தினா என்ற மேற்படி கிரேக்கப் பெண் குறிப்பிட்ட யூத குடும்பத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களை தனக்கிருந்த உயிராபத்தையும் பொருட்படுத்தாது தனது வீட்டில் மறைத்து வைத்திருந்து அவர்கள் தப்பிச் செல்வதற்கு உதவியுள்ளார்.
அந்தக் குடும்பத்தை தமது இருப்பிடத்தில் மறைத்து வைத்திருந்த காலத்தில் தினாவும் அவரது சகோதரிகள் இருவரும் தமக்கு கிடைத்த சொற்ப உணவை மேற்படி யூத குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்டுள்ளனர்.
இந்நிலையில் அவரால் காப்பாற்றப்பட்டவர்களில் தற்போதும் உயிருடன் இருக்கும் சாரா யனேயியும் யொஸி மோரும் யூத உரிமைகள் மன்றத்தின் உதவியுடன் வாட் யஷிம் இன அழிப்பு ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் தம்மைக் காப்பாற்றிய தினாவுடன் சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது அவர்கள் தமது 20 பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அங்கு அழைத்து வந்து தினாவால் காப்பாற்றப்பட்ட தமது குடும்பம் எவ்வாறு ஆல விருட்சமாக பரந்து விரிந்துள்ளது என்பதை அவருக்கு காண்பித்து அவரை மகிழ்ச்சிப் பெருமிதத்தில் ஆழ்த்தினர்.
சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியின் கீழிருந்த நாஸி ஜேர்மனியானது 1941ஆம் ஆண்டுக்கும் 1944 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. இதன்போது நாஸிகளால் 80,000 க்கும் மேற்பட்ட கிரேக்க யூதர்கள் கொல்லப்பட்டனர்.