ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன. வெற்றி பெறும் வேட்பாளர்கள் என்ற நம்பகத் தன்மையைக் கொண்டவர்களான சஜித் பிரேமதாஸவினதும், கோத்தாபய ராஜபக் ஷவினதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பெரும் சனத்திரள் காணப்படுகிறது. இதனால், எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடியாதுள்ளது.
ஆயினும், சிங்களப் பிரதேசங்களில் மேற்படி இரு வேட்பாளர்களினதும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்படையில் பெரும்பாலும் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் ஏறத்தாழ சமமாகவே இருக்கும் என புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகள் தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிக்க இருக்கின்றன. சிங்கள மக்களை போன்று சிறுபான்மை மக்களும் இரு வேட்பாளர்களுக்கும் சமமாக வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
சிறுபான்மைக் கட்சிகள்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தீர்க்கமான முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை. இதனால், தபால் மூல வாக்குகளை தாம் விரும்பியவாறு அளிக்குமாறு அக்கட்சி தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளமை ஒரு சாணக்கியமான முடிவாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு என்று நேரடியாக அறிவித்தால், குறிப்பிட்ட அந்த வேட்பாளர் இனவாதிகள் ஆதரிக்கும் வேட்பாளராக இல்லாதிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கையும், கிழக்கையும் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்று மிகப்பெரியதொரு இனவாத பிரசார பிரளயத்தையே எடுப்பார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்தாலும் இதுதான் நிலையாகும். இதனால், ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமது நிலைப்பாடு என்னவென்பதனை, இறுதிக் கட்டத்திலேயேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கும் எனத் தெரிகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தென்மராட்சியில் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. இருவரும் கெட்டவர்கள் தான். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கோத்தாபய ராஜபக் ஷ ஏற்கனவே கூறிவிட்டார்.
சஜித் பிரேமதாஸவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக் ஷாக்கள். ஆகவே, நாம் நிதானமாகச் செயற்படவேண்டும். சில வேளைகளில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறு தான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது. இந்த இடத்தில் நாம் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தாபய உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை.
தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவு செய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம் என்று தெரிவித்துள்ளார். இவரது இக்கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் யாரை ஆதரிக்கும் என்று தெரிய வருகின்றது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கோத்தாபயவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதன்படி சிறுபான்மையினர் மத்தியில் அதிகளவு மக்கள் ஆதரவைக் கொண்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருப்பதனால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் அதிகமானவை சஜித் பிரேமதாஸவுக்கு அளிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி.ஹஸன்அலி கோத்தாபயவுக்கு ஆதரவு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இக்கட்சியின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகு தாவூத் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஸன்அலியும், முஸ்லிம் காங்கிரஸும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு எதிராக செயற்பட்டமை நினைவிற் கொள்ளத்தக்கது. 2005, 2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ போட்டியிட்ட போதிலும், முஸ்லிம் காங்கிரஸ் அவரை ஆதரிக்கவில்லை. ஆயினும் 2005ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவின் அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டது. மஹிந்தவின் அரசாங்கத்தில் பெருந்தோட்ட துணைப் பயிர் அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஹஸன்அலி நியமிக்கப்பட்டார். ஆயினும், ஹஸன் அலிக்கும் மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. ஹஸன்அலியின் சமூகம் சார்ந்த அறிக்கைகள் மஹிந்தவை எரிச்சலடையச் செய்தது. அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ஷ ஹஸன் அலியின் முன் மொழிவுகளை முற்றாக நிராகரித்தார். இந்தளவிற்கு அரசாங்கத்திற்கும் ஹஸன்அலிக்கும் முரண்பாடுகள் காணப்பட்டன.
அதுமட்டுமன்றி, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநியாயங்களை ஒரு ஆவணமாக தயாரித்து இலங்கை வந்த அன்றைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையிடம் ஹஸன்அலி கையளித்தார். இதனை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ அறிந்த போது ரவூப் ஹக்கீம் மீது அவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ரவூப் ஹக்கீம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்க எண்ணியிருந்தார். ஆனால் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த ஹஸன்அலி அதனை எதிர்த்தார். எக்காரணம் கொண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க முடியாதென்று ஹஸன்அலி தெரிவித்தார். இதன் பின்னர்தான் முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியது.
இவ்விதமாக மஹிந்தவின் அரசாங்கத்தை எதிர்த்த ஹஸன்அலி, தற்போது மஹிந்தவின் சகோதரர் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ளார். அதாவது முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான அரசியலையே அவர் தீர்மானித்துள்ளார்.
பசீர் சேகுதாவூத் 2010ஆம் ஆண்டு மஹிந்தவின் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு தெரியாமலேயே முழு அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டவர். அந்தளவுக்கு அவருக்கும், மஹிந்தவுக்கும் நெருக்கம் இருந்தது. இப்போதும் இருக்கின்றது. 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்த போதிலும், பசீர் சேகுதாவூத் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்தார்.
இந்தப் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தீர்மானம் எடுத்திருந்தார். ஆயினும், ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவாரா என்ற சந்தேகம் முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்களிடையே இருந்தது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு பசீர் சேகுதாவூத் பணம் கட்டினார். இந்நிலையில், ஹிஸ்புல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பசீர் சேகுதாவூத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸானார். பிரதிநிதித்துவ அரசியலுக்கு விடை கொடுத்து விட்டேன் என்று அறிவித்த பசீர் சேகுதாவூத் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தமையும், ஹிஸ்புல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டமையும் கோத்தாபய ராஜபக் ஷவை வெல்ல வைப்பதற்காக எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாகும். இதற்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த போது, ஹஸன்அலி, பசிர் சேகு தாவூத் ஆகியோர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதன் பின்னர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. அவர் முஸ்லிம் சமூகத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் என்று ஊடகங்களில் அறிக்கையை விடுத்தார் ஹஸன்அலி.
இவ்வாறு ஹிஸ்புல்லாஹ்வின் தீர்மானத்தை ஆதரித்து பேசியதோடு, அதில் சமூகம் சார்ந்த விடயமுள்ளதென்று தெரிவித்த ஹஸன்அலி, தற்போது ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு வழங்காது, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளமையை முஸ்லிம் சமூகத்திற்காக என்று கூறி முழு சுயநலத்தை புதைத்து விட முடியாது. பசில் ராஜபக் ஷவிடம் 13 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அது பற்றி கோத்தாபய ராஜபக் ஷஷ எதனையும் பேசவில்லை. ஆனால், எங்களது கோரிக்கைகளை ஏற்றுள்ளார்கள் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் முகநூலில் கதை கூறி கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது ஹிஸ்புல்லாஹ் தான் வெல்லும் ஜனாதிபதி வேட்பாளரல்ல. ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என்றும், முஸ்லிம்களின் 02 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை இலக்கு வைத்து போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். பௌத்த இனவாதம் தலைவிரித்தாடும் நிலையில், முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வேண்டுமென்பது கூட பௌத்த இனவாதிகளுக்கு கையில் பொல்லைக் கொடுத்ததாகவே இருக்கின்றது. இப்போது அவர்கள் மௌனமாக இருப்பது தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்ததும் ஹிஸ்புல்லாஹ் கொடுத்த பொல்லையும் தூக்கிக் கொண்டு வருவார்கள் என்பது முன்னெச்சரிக்கையாகும்.
, ஹிஸ்புல்லாஹ் தனித்து போட்டியிடுவதிலும், ஏனைய முஸ்லிம் தலைவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கும், கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பதிலும் எந்தவொரு சமூகம் சார்ந்த விடயமும் கிடையாது. அவர்களின் சுய அரசியலையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவரையும் சமூகத் தலைவர்கள் என்று பட்டம் சூட்டவேண்டியதில்லை. எம்.சுமந்திரன் கூறியது போன்று இருவரும் கெட்டவர்கள்தான். அதனால், முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு அடாவடித்தனங்கள் குறையுமென்று எதிர் பார்க்கின்றோமோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் எந்தவொரு வேளையிலும் பயனற்றதாக இருக்கக் கூடாது.
வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களித்தல்
இதே வேளை, முஸ்லிம்கள் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் வெற்றி பெறும் வேட்பாளர் என்றில்லாது முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் பிரசாரம் செய்கின்றார்கள்.
முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது என்பது இன்றைய அரசியல் சூழலை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதனை விடவும், முஸ்லிம்களை யார் அதிகம் ஏமாற்ற மாட்டார் என்று கணித்து வாக்களிக்க வேண்டும்.
சஹாப்தீன்