ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலை சாய்க்கும் என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தாலும் கூட இம்முறை தேர்தலில் அது நடக்காது. பெரும்பான்மை வாக்குகளில் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். ஆனாலும் இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
நிகழ்கால அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து நிலங்களை சர்வதேசத்திற்கு விற்கும் கொள்கை மட்டுமே கையாளப்பட்டது. உடன்படிக்கைகள் மூலமாக துறைமுகங்கள், காணிகள் சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கப்பட்டன. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட தீர்மானங்களே அதிகமாக இருந்தன. எனினும் நான் சிறிது காலம் பொறுத்துக்கொண்டு அரசாங்கத்தில் இருந்தேன். ஜனாதிபதி கேட்டுக்கொண்ட காரணிகளுக்கு அமைய கல்வி அமைச்சினை பொறுப்பேற்று அதன் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுத்தேன்.
இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை மிகவும் பலவீனமான அமைச்சரவையாகும். நாட்டுக்கும் மக்களுக்கும் தேசிய கொள்கைக்கும் அமைவாக எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. ஒரு சில அமைச்சர்கள் தமக்கு தேவையான நபர்கள் குறித்து அவர்களுக்கு சாதகமாக செய்ய வேண்டிய விடயங்கள், நிலங்களை விற்கும் நடவடிக்கைகள் என்பது குறித்து மட்டுமே பேசினர். ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டிருக்காவிட்டிருந்தால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற பிரதான இரண்டு காரணிகள் உள்ளன. தகுதியற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமித்ததுடன் ஒருசில மோசமான அதிகாரிகளுக்கு பொறுப்புக்களை கொடுத்தனர். அரசியலமைப்பு சபையில் நான் அப்போதும் எதிர்த்தேன். எனினும் பிரதமர் என்னை தடுத்தார். ஜனாதிபதியும் தவறு செய்துள்ளார். ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அதிகாரத்தை கொடுத்தமை தவறாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்து பல நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டோம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் ஒரு அணியாகி இலங்கைக்கு எதிராக செயற்பட்டன . இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவும் இதுவே காரணம். சோபா உடன்படிக்கையை இலங்கைக்குள் கொண்டுவர அமேரிக்கா முழுமையாக முயற்சி எடுத்தது. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் அனைத்தின் உருவாக்கதாரிகள் அமெரிக்கா மட்டுமேயாகும். அவர்களை கொண்டு அமெரிக்கா இயக்கியமைக்கு அமையவே இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது என்பதே உண்மை. அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பலவீனமாகிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் மிகவும் மோசமானவையாகும். இவர்கள் தொடர்ச்சியாக நாட்டினை குழப்பும் துண்டாடும் நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சி இன்றும் ஆட்சியில் உள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காராணம். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலை சாய்க்கும். சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெரும் கட்சிக்கு இம்முறை வெற்றி கிடைக்கும் என கூற முடியாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாது மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தது உண்மையாகும். ஆனால் இம்முறை பெரும்பான்மை வாக்குகளில் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றார்.