கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கு புத்துயிர்!

ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர்  செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல்  விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்

தமிழில் – அ. ரஜீபன்

1கேள்வி-

இலங்கையில்  பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எப்படி உங்களை இணைத்துக்கொண்டீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க முடியுமா?

 

பதில்-

எனது கணவர் பிரகீத் 2010 இல் கடத்தப்பட்டார்.அந்த மோசமான நாளில் இருந்து  காணாமல்போனவர்கள்  குறித்த உண்மைக்காக நான் குரல்கொடுத்து வருகின்றேன்.

உள்ளுர் முயற்சிகள் தோல்வியடைந்த வேளைநான் ஜெனீவாவிற்கு  நீதியை கோருவதற்காக சென்றுள்ளேன்.

காணாமல்போனவர்களிற்கு நீதி கோரி மேற்கொண்டுள்ள போராட்டத்தின் போது  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நான் காணாமல்போனவர்களின் தாய்மார்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போகச்செய்யப்பட்டதன் பின்னணி குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு நாங்கள்அரசாங்கத்தை கோரிவருகின்றோம்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல்போனவுடன் வாழ்வாதாரத்திற்காக போராடும்குடும்பத்தவர்களிற்கு அரசாங்கம் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் நாங்கள் கோரி வருகின்றோம்.

காணாமல்போனவர்கள் குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டமை போன்ற முன்னேற்றகரமான விடயங்கள்சில இடம்பெற்றுள்ளன.

ஆனால் உண்மையைகண்டுபிடித்து  பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆதரவளிப்பதற்காக மேலும் முயற்சிகள் அவசியம்.

இந்த பிரகடனத்தினால் இன்னும் உள்நாட்டில் சட்டம் உருவாகவில்லை.

பிரகீத் காணாமல்போன விவகாரம் குறித்த  விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்காக நான் நூற்றிற்கும் மேற்பட்ட தடவைகள் நீதிமன்றம் சென்றுள்ளேன்.

அதேவேளை  வடக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகள் குறித்த பதிலை கோரி வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நாடு தீர்க்கப்படவேண்டிய முக்கியமான விடயமாக அவர்களிற்கான நீதி காணப்படுகின்றது.

கேள்வி-

நீங்கள் எவ்வகையான அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளீர்கள்?

பதில்- நான் பல தடவை அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன்.என்னை துரோகி என அழைத்துள்ளனர், முகநூலில் எனக்கு எதிரான கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பலவழிகளில் முன்னெடுக்கப்பட்ட குரோத பிரச்சாரத்தின் இலக்காக நானும் பிரகீத்தும் காணப்பட்டுள்ளோம்.பொதுமேடைகளிலும் சுவரொட்டிகளிலும் எனது பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.

ராஜபக்ச வம்சாவளியினர் திட்;டமிட்ட முறையில் முன்னெடுத்த பிரச்சாரம் இதுவென நான் கருதுகின்றேன்.

தேசிய வாத பௌத்த மதகுருமாரும் என்னை இலக்குவைத்து செயற்பட்டுள்ளனர்.

சிங்கள தேசிய வாத அமைப்பான பொதுபல சேனவின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரர் பிரகீத்தின் வழக்கை நான் அவதானித்து கொண்டிருந்தவேளை என்னை நீதிமன்றத்தில் அச்சுறுத்தினார்.

நான் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன்.2019 இல் ஹோமாகம நீதிமன்றம் அவர் குற்றவாளி என அறிவித்தது,அந்த தீர்ப்பின் பின்னர் நான் தீவிரமானஅச்சுறுத்தல்களை சந்தித்தேன்,என்னையும் எனது பிள்ளைகளையும்கொலை செய்யப்போவதாக  மிரட்டினார்கள்.

2018 இல் ராஜபக்ச வம்சாவளியை சேர்ந்த ஒருவர் எனக்கு வைத்த பொறியிலிருந்து நான் தப்பித்தேன்.

அவர்கள் தங்களின்  நபரான முன்னாள் கடற்படை அதிகாரியொருவரை என்னை சந்திப்பதற்காக அனுப்பிவைத்தனர், அவர் நான் இரசாயன ஆயுதங்கள்குறித்த விபரங்களை வெளியிட்டால் என்னை அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதாக தெரிவித்தார்.

நான் இது  நேர்மையான வேண்டுகோள் என கருதவில்லை.பிரகீத்திற்கு நீதி கோரும் எனது முக்கிய முயற்சியை குழப்பும் முயற்சியாக நான் இதனை பார்த்தேன் .

இந்த தடைகள் நீதிக்கான எனது போராட்டத்தை  தடுத்து நிறுத்தவில்லை  ஆனால் ஒரு செயற்பாட்டாளரின் போராட்டத்தை அவை  சவாலானவையாக மாற்றுகின்றன.

கேள்வி

தேர்தலிற்கு முன்னதாக சிவில் சமூகத்தின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஏதாவது நடவடிக்கை குறித்து நீங்கள் கரிசனைகொண்டுள்ளீர்களா?

பதில்- ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர்  செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது.

இந்த சக்திகள் தற்போது உரத்து குரல் எழுப்புபவர்களாகவும் மிரட்டல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர்.

கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடும் தகுதியற்றவர் என தெரிவித்து காமினிவியாங்கொடவும் சந்திர குப்த தேனுவரவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பின்னர் மதுமதாவே அரவிந்த  என்ற அரசியல்வாதி வியாங்கொட என்ற பெயரை  போன்ற பெயர் ஒன்றுள்ளது அது எக்னலிகொட உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பதிவு செய்தார்.

எனது கணவர் உண்மையை தெரிவித்தமைக்காக  காணாமல்போகச்செய்யப்பட்டது போன்று இது அந்த இருவருக்கும் எதிரான அச்சுறுத்தலாககாணப்பட்டது.

தேர்தலிற்கு முன்னதாக வன்முறைகளிற்கான வாய்ப்புகள் உள்ளன,நீதிமன்ற வழக்கில் கோத்தாபயவிற்கு சார்பாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவாளர் வீட்டிற்கு கோத்தபாயவின் ஆதரவாளர் தீ வைத்தார்.

இந்த வன்முறைகள்  சிவில் சமூக செயற்பாட்டாளர்களிற்கு எதிராகவும் இடம்பெறலாம்.

கேள்வி

இலங்கையில் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளிற்கும் அதிக கௌரவம் வழங்கப்படும் நிலையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகமும்  சர்வதேச சிவில் சமூகமும்  இலங்கையின் சிவில் சமூகத்திற்கு எவ்வகையான ஆதரவை வழங்கவேண்டும்?

பதில்-

கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்.

சர்வதேச சிவில் சமூகத்தினர்  அதிகளவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள என்னை போன்றவர்களிற்கு உதவுவதற்கு தயாராகயிருக்கவேண்டும்.

இலங்கையில் உள்ள சிவில் சமூக பணியாளர்களிற்கான தங்கள் ஆதரவைசிவில் சமூகத்தினர்  வெளிப்படுத்தவேண்டிய தருணம்இது,மேலும் நண்பர்கள் சகாக்களுடன் பாதுகாப்பு தேவைகள் குறித்து ஆராயவேண்டும்.

அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் உண்மைக்கான அவசியத்தை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பாதிக்கப்பட்டவர்களுடன் ஸ்தாபனங்கள் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது அவசியம்.

இலங்கையில் முக்கியமான நீதி வழக்குகள் குறித்து சிவில் சமூக அமைப்புகள்  விழிப்புணர்வுடன் இருப்பதுடன்  விசாரணைகளிற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னர் சிவில் சமூகத்தினரின் நிலைமை எவ்வாறானதாக உள்ளது?

பதில்- 2010முதல்2015 வரை சிவில் சமூகத்தினரின் நிலை மிகவும் ஆபத்தானதாக காணப்பட்டது.

மிகமோசமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன,உண்மையை தெரிவித்தால்  நாங்கள் எவ்வேளையிலும் காணாமல்போகும் அல்லது கொல்லப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தோம்,மனித உரிமை செயற்பாட்டாளர்களை மௌனமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கின்றோம். பாலேந்திரன் ஜெயக்குமாரி விவகாரம் இதற்கு உதாரணம்.

2015 இல் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

சில சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் அதிகரித்தது.

ஆனால் சமீபத்தில்  கருத்துச்சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கின்றோம்,இது எனக்கு கவலையளிக்கின்றது.

தற்போது சூழல் அமைதியாகவுள்ள போதிலும்  சமூக ஊடகங்களில் நச்சுசக்திகளை தோன்றுவதை காணமுடிகின்றது.

துரோகிகள் என குற்றம்சாட்டும் வெறுப்புணர்களை வெளியிடும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.

இது திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும்.