சிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு (01) வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களைப் பிரித்து, முஸ்லிம்களை ஓரங்கட்டி தமிழ் கிறிஸ்தவ மக்களை அவர்கள் பக்கமெடுத்து அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்காக தீட்டிய திட்டம்தான் ஏப்ரல் குண்டுத்தாக்குதலாகும்.
இந்த நாட்டில் பதினோராயிரம் பேர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இருக்கின்றார்கள் நூற்றிப் பத்தொன்பது தடவைகள் சஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவரைப் பிடிக்கவில்லை. எங்களுக்கும், உங்களுக்கு சிறிய பிரச்சினை என்றால் எத்தனை தடவை பொலிஸார், புலனாய்வுத்துறையினர் தேடிவருவார்கள். ஆனால் இந்த சஹ்ரானை தேடவில்லை ஏனென்றால் சஹ்ரான் இருந்தது அவர்களுடைய பாதுகாப்பில்தான்.
அவர்கள் முஸ்லீம்கள் எல்லோரையும் பயங்கரவாதிகளாக காட்டப் பார்த்தார்கள், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் பயங்கரவாதிகளென்று வேண்டுமென்றே அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். இந்த தேர்தலிலே அவர்கள் அமைத்த வியூகம் இதுதான்.
இம்முறை தேர்தலில் வெல்லுவதாக இருந்தால் முஸ்லிம்கள் எமக்கு வாக்களிக்க மாட்டார்கள் அவர்களைத் தள்ளி வைப்பதற்கான ஒரு தந்திரோபாயம்தான் இவ்வாறான நாடகமாகும். தமிழ், கிறிஸ்தவ மக்களிடத்திலிருந்தும் இந்த முஸ்லிம் சமூகத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டுக் கொண்ட சதிதான் இவைகள் என்றார்.