இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ஒருவர் கூறினால் இன்னொருவரும் இன்னும் அதிகமாக நான் தருவேன் என்கிறார். பெரிய நிறுவனங்களுக்கு வரிகுறைப்பு பற்றியும் கூட உறுதிமொழி அளிக்க இவர்கள் தவறிவிடவில்லை. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்க பெருமளவு பணம் தருவதாக வானத்தளவுக்கு உறுதி மொழிகள் தாராளமாக வழங்கும் அதேவேளையில் அதற்கான நிதி வசதி எங்கோ இருந்து வருவதாகவே அனுமானிக்கப்படுகிறது? எங்கிருந்து?
ஆனாலும் கூட ஒரு முக்கிய பிரச்சினைத் தொடர்பில் இதுவரை எதுவித, ஏதாவதொரு உறுதி மொழியும் கூட இவர்கள் எவரொருவரிடமிருந்தும் வரவில்லை. நாட்டில் நிரந்தரமாகவும் நீண்டகாலமாகவும் நிலவி வரும் இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலுமான முரண்பாடுகளையும் சச்சரவுகளையும் தீர்ப்பதற்கு எவரொருவரும் எதனையும் கூறவில்லை. இப்பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட மூன்று தசாப்த காலத்தில் இரு தரப்பினராலும் மீறப்பட்ட மனித உரிமை அத்துமீறல்களுக்கும் அவற்றால் ஏற்பட்ட வேதனைகள், காயங்கள் என்பவற்றிற்கான தீர்வுகள் இதுவரை எதுவும் இன்னும் ஏற்படாத நிலையில் அவற்றிற்கான அரசியல் தீர்வுகள் எட்டாததனால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வேண்டிய அத்தியாவசிய தேவை இன்னும் நாட்டில் நிலவி வருவதனை எவரும் உதாசீனம் செய்வதற்கில்லை. அவ்வாறான பிரச்சினைகள் தீர்ப்பதன் தேவை பற்றி எந்தவொரு வேட்பாளரும் எது ஒன்றினையும் கூறாமலே நழுவி வருகின்றனர். மாறாக நாடு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் பிளவுக்காளாகாத வகையில் வலிமையான அரசாங்கத்தை ஏற்படுத்த உள்ளதாக மட்டுமே யாவரும் கூறி வருகின்றனர்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு வலிமையான அரசாங்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற திர்வு பற்றி இலங்கை மட்டுமே சிந்திப்பதாக கூறவும் முடியாது. அண்டை நாடான இந்தியாவில் பிரதமர் மோடி அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்துள்ளார். இந்தியாவில் பெரிதும் அதன் சுதந்திர செயற்பாடுகளுக்காக பாராட்டப்பட்டு வரும் நீதித் துறையும் கூட இந்திய அரசாங்கம் இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தினை மீள பெற்ற போது அந்த தீர்மானத்தை பின்வாங்கச் செய்ய முயலவில்லை. அந்நாட்டு நிலவரம் பற்றி பார்த்தால் முன்னர் இதுவரை 41 வீதத்திற்கு மேலாக வாக்களிக்காத காஷ்மீர் தேர்தலில் இப்போது ஏறத்தாள 90 வீதமானவர்கள் பங்கேற்றுள்ளனர். பிலிப்பைன்சில் ஆயிரக்கணக்கான போதைப் பொருள் வியாபாரிகளும் பயன்பாட்டாளர்களும் வீதிகளில் சுட்டுக் கொன்றதன் மூலம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டூடாடே அந்நாட்டில் பிரபல்யமாகவே இருந்து வருகிறார் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன.
வேறுபட்ட வழிகள்
உலகில் ஆட்சி ஆதிக்க கொள்கை யுடைய அரசாங்கங்களுக்கு வாக்களிக்கும் போக்கு ஒரு புறமிருக்க இலங்கையிலோ 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகளை பாதுகாப்போம், நல்லாட்சி வழங்குவோம், மக்களுக்கு பொருளாதார சுபீட்சம் ஏற்படும் வகையில் பொருளாதாரத்தை .மேம்படுத்துவோம். என்று உறுதிமொழிகள் வழங்கிய அரசாங்கத்திற்கே வாக்களித்தனர். ஆனால் மக்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுறுதி மொழிகள் பொது மக்களை திருப்தி படுத்தும் அளவில் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அவ்வரசாங்கம் நிறைவேற்றிய பலவும் கூட இப்போது சந்தேகத்திற்கு ஆளாகியுள்ளன. மனித உரிமைகளுக்கும் நல்லிணக்கத்திற்கும் மிக குறைந்த முன்னுரிமை வழங்குவதன் மூலமாக வலிமையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதன் மீது கவர்ச்சி அதிகமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனாதிபதித் தேர்தலே அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இலங்கையின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ள பாராளுமன்ற தேர்தலின் போக்கினை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டதென்பதால் இது (இந்த சனாதிபதித் தேர்தல்) மிக முக்கியமான தேர்தலாக உள்ளது.
இப்போதைய அரசாங்கத்தின் வெற்றிமிகு சாதனைகள் குறிப்பிடத்தகுந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருத்து வெளியிடும் உரிமைகள், காணாமற் போய் விடுவோமோ என்ற அச்சம் நீக்கப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க கணிசமான முக்கிய மேம்பாடுகளாகும். நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், உயர் கட்டிடங்கள் போன்று இவ்வாறான மேம்பாடுகளை கண்ணால் காண முடியாது ஆனால் நெடுஞ்சாலை மட்டுமே உணர முடியும்.அரசாங்கம் தனது பாராளுமன்றததில் உள்ளமைந்த பிரிவனை பலவீனத்தின் மத்தியிலும் (இ.சு.கட்சி) நாட்டின் பிரதான நிறுவனங்களான நீதித்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றையும் புதியனவான தகவலறியும் உரிமை ஆணைக்குழு போன்றவற்றையும் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனைகளே சுதந்திரமான அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட்டதன் காரணமாக இந்நிறுவனங்கள் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் போன்று சனாதிபதியின் விருப்பு வெறுப்புக்களின் பேரில் உருவாக்கப்படாது சுதந்திர பக்கச்சார்பற்ற அமைப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பெரும்பாலான தேர்தல் தொகுதிகள் தமக்கு முக்கியமானதென வேறு சிலவற்றை தெரிந்து பார்க்கலாம். பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் என்பன தொடர்பில் அரசாங்கம் தவறிவிட்டதாக கருதலாம். அவ்வாறாக கடந்த ஐந்தாண்டுகளில் கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பினை கூறலாம். அன்று 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டு விட்டதால் அதனை ஒரு பாரிய அசம்பாவிதமாக கருதி அரசாங்கத்தின் தலைவர்கள் மீது கசப்புணர்வுகள் ஏற்பட வேண்டியதாயிற்று. இது ஒன்றையே காரணமாகக் கொண்டு வலிமையான அரசாங்கத்தை அமைக்க உறுதி கூறும் வேட்பாளரையே, மனித உரிமைகளை காப்பது, நேர்மையான ஒளிவுமறைவற்ற அரசாங்க நிர்வாகம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க தேவையான சுதந்திர நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை காட்டாது தெரியவும் விரும்பலாம் என்பதற்கான வாய்ப்பும் உண்டு!
சனநாயகம் உறுதி செய்யப்படுதல்
இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே தாராள சிந்தனையுடனான பல்லின, பல்சமய பன்மைவாத சமூகத்தின் இருப்பு சவாலுக்குள்ளாகியதாக கூறுவதற்கும் இல்லை. உலகின் பழைமையான சனநாயக நாட்டிலும் கூட முதற்பார்வையில் தேசிய சிந்தனைகளில் அதிகரிப்பினையும் ஏனைய கலாசாரங்களை சேர்ந்தவர்கள் மீதான சகிப்புத் தன்மை குறைந்தமையினையும் காணமுடியும். இருந்த போதிலும் மேற்குலக ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் ஏனைய மக்களது மனித உரிமைகளை அங்கீகரிக்க தவறுகையில் நாட்டின் அனைத்து மட்டங்களில் உள்ளவர்களும் அரசை எதிர்த்து நின்று போராடுகிறார்கள். ஏனெனில் அங்கே நிலவும் அதிகாரப் பகிர்வு முறைகள் உள்ளூர் மட்டத்திலும், நாட்டின் அரசாங்கத்திலும், மாநிலங்களிலும், மாகாணங்களிலும் நிலவுவதாலும் நீதித்துறை மற்றும் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதாலும் அவற்றில் நியாயமான அளைவுக்கு மனித உரிமைகள் அத்துமீறல்கள் கட்டுப்படுத்தலுக்கு உட்படுகின்றன. சிரிய அகதிகள் பத்து இலட்சம் பேரை ஜேர்மனி ஏற்றுக் கொண்டமை பல நூற்றுக்கணக்கானவர்களை கனடா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டமை, அகதிகள் நுழைகையில் சிறுவர்களை கைது செய்தமையை ஐ.அமெரிக்காவில் நிராகரித்தமை என்பன உள்ளிட்ட பல உதாரணங்களை காணக்கூடியதாக உள்ளது.
பெரும்பான்மையினரது விருப்புகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதே சனநாயகத்தின் பெறுமானம் ஆகாது. அதில் அதிகாரங்கள் வேறான நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் மனித உரிமைகள் தனிப்பட்டவரது சுதந்திரம் என்பவை உறுதி செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரத்திற்கு எதிரான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
ஊடகங்கள், நீதித்துறை, மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு என்பன நிறுவப்பட்டு அவை தமது கட்டுப்பாடுகளை அரசாங்கத் தலைவர்கள் மீது செலுத்தி அவர்கள் தமக்கு வாக்களித்தவர்களை உதாசீனம் செய்துவிட்டு தன்னிச்சையாக செயற்பட விடாது தடை செய்கின்றன. உண்மையான சனநாயக பெறுமானங்களை மதித்து நடக்கும் தலைவர்கள் இவ்வாறான அரச நிறுவனங்களை தமது அதிகாரங்களுக்கு எதிரானவை எனக் கருதி அவற்றை எதிர்த்து, முரண்பட்டு, அடக்கியாள முற்படமாட்டார்கள். ஆனால் இந்நிறுவனங்கள் சனநாயகத்தை உறுதி செய்யவும் அனைத்து தரப்பினரது நலன்களுக்காகவும் தேவையானவை என்ற வகையிலேயே செயற்படுவார்கள்.
ஐக்கிய அமெரிக்காவில் 1960 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற குடியுரிமை முரண்பாடுகளின்போது கருப்பின சிறுபான்மை மக்கள் தமது இனத்தினை காரணமாகக் கொண்டு பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக போராடினார்கள். அப்போது போதியளவிலான வெள்ளையின அரசியல்வாதிகளும், சிவில் சமூகத் தலைவர்களும் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக தமக்கிருந்த பெரும் இடர்களை அறிந்திருந்தும் போராட முன்வந்து செயற்பட்டனர். “சிறந்த எதிரிகள்: புதிய தெற்கில் இனமும் அதற்கான பரிகாரமும்” என்ற நூலில் ஒசா கிறே டேவிட்சன் என்பவரால் எழுதப்பட்டது. அதில் சிவில் உரிமை ஆர்வலரான ஆன் அட்வாட்டர் என்பவருக்கும் கூட கிளக்ஸ் கிலான் தலைவரான சி.பி.எல்விஸ் என்பவருக்கும் இடையிலான போட்டிகள் பற்றிய விளக்கம் எப்படி ஒரு நிலையில் கருப்பர்களுக்கு எதிரானவர்கள் நீண்டகால ஈடுபாடுகளின் விளைவாக பின்னர் மனமாற்றங்களுக்கு உள்ளாகி விடலாம் என்பதற்கான உதாரணமாக காணப்படுகிறது.
சனாதிபதித் தேர்தலின் முடிவுகள் எதுவானாலும் அதனை மட்டும் கவனத்தில் கொள்ளாது இனங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடையிலுமான பணிகளும் அமைதி நல்லிணக்கம் மற்றும் மனமாற்றம் என்பன இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெறுவது போன்று தொடர்ந்தும் இடம்பெற வேண்டும்.
ஜெஹான் பெரேரா