புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும்.
நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன்று கைச்சாத்திடப்படும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நாட்டில் ஜனநாயகம், சமூக சமத்துவம், நியாயாதிக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கிய பயணத்தில் மற்றொரு படியாகும்.
புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளிக்கும் இத்தருணம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்காகும்.
மேலும் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் அதேவேளை, அதன்மூலம் பெறப்படும் வருமானம் மக்கள் மத்தியில் சமனாகப் பகிரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சட்டத்தின் கீழ் அனைவரும் ஒரே விதமாக நடத்தப்படுவதுடன், சமுதாய சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
நாட்டில் அறிவை மையப்படுத்திய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி பாரம்பரிய கைத்தொழில் துறையை நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் வலுப்படுத்த வேண்டும்.
தனியொரு குடும்பமோ அல்லது குறித்தவொரு பிரிவினரோ மாத்திரமன்றி நாட்டு மக்களனைவரும் அனுபவிக்கக்கூடிய விதமாக பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அடையப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். மக்கள் செலுத்தும் வரியின் ஊடாக அரசிற்குக் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முதலீடு செய்வதற்கு எதிர்காலத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.