ஆஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ளவர்கள் மிகவும் நெருக்கமான தங்குமிடங்களில், கார்களில், ஹோட்டல் சமையலறைகளில் இரவில் தூங்க வேண்டிய வீடற்ற அவலநிலை இருந்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முறையான மீள்குடியேற்ற வசதிகள் இல்லாததால் இந்த வீடற்ற நிலை அகதிகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 24 இளம் அகதிகளை பின் தொடர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜென் கெளச், இந்த காலக்கட்டத்தில் அகதிகள் பல மோசமான, பாதுகாப்பற்ற, தற்காலிக இடங்களில் தூங்கியதைக் கண்டறிந்துள்ளார். சிலர் பள்ளியிலோ பணியிடங்களிலோ தங்கியுள்ளனர், பெரும்பாலோனருக்கு கல்வி வாய்ப்பில்லை. சரியான வீடு வசதி இல்லாததால் பல அகதிகளுக்கு வேலைக்கிடைக்காத நிலை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அகதிகளின் வயது 15 முதல் 25 வரையாகும். இதில் பெரும்பாலானோர் மனிதாபிமான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் , குடும்பத்துடன் ஆஸ்திரேலியா வந்த நிலையில் மீள்குடியேற்ற பரிசீலணை காலத்தில் குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களாக உள்ளனர்.
இந்த ஆய்வின் காலக்கட்டத்தில், வீடற்ற அகதி சிறை சென்ற நிகழ்வும் ஓர் அகதி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.