பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் என்ற ஆஸ்திரேலிய நகரங்களில் திறன்வாய்ந்த வெளிநாட்டு குடியேறிகள் குடியேறுவதை அந்நாட்டு அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
பிராந்திய விசாவின் கீழ் குடியேறுபவர்களுக்கான இடப்பட்டியலில் இந்நகரங்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் சுமார் 70 சதவீத மக்கள் தொகை சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களிலேயே மையம் கொண்டிருக்கும் சூழலில், பிராந்திய விசாவுக்கான பட்டியலில் பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன்.
பிராந்திய ஆஸ்திரேலியாவில் மேலும் 2000 திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்பு 23 ஆயிரமாக இருந்த பிராந்திய விசாக்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரமாக
உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த குடியேற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு 160,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த எண்ணிக்கை, 190,000 இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய விசா மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய பகுதிகளில் மூன்றாண்டுகள் ஒரு வெளிநாட்டினர் வசிக்கும் பட்சத்தில், அவர் நிரந்தரமாக வசிக்கும் விசாவுக்கு தகுதியுடையவராக அங்கீகரிக்கப்படுகிறார்.
பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் நகரங்கள் பிராந்திய விசா பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு, வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கும் பல்கலைக்கழகங்களின் உந்துதலும் காரணமாக சொல்லப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal