ஜனாதிபதித் தேர்தல்; முத‌ற் கோணல்!

நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான்.

இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்;  எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்?

இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்சினை / கேள்வி ஒன்றுக்கான தீர்மானகரமான முடிவை எடுப்பதற்கான / பதிலைத்  தேடுவதற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
எல்லாத் தேர்தல்களிலும் எல்லாக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அபிவிருத்தி ஒன்றையே முதல் வாக்குறுதியாகக் கொடுப்பதுதான் வழமை. ஆனால், பெரும்பான்மையினரைப் பொறுத்தவரையில், அப்படியான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சற்று வித்தியாசமான எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழர்களைப் பொறுத்தவரையில், நீண்டகாலமாக நடைபெற்று வருகின்ற இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு; முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மதம், இனம் சார்ந்த நெருக்குவாரங்கள்; அடக்குமுறைகள்.

இதில் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். இவற்றுடன் இன்னும் பலவும் இருக்கலாம். ஆனாலும், கிழக்கை மய்யப்படுத்திய அரசியலைப் பொறுத்தவரையில், தொடர்ச்சியாக அபிவிருத்தி, இருப்பு பற்றியதாகவே பேச்சுகள் இருக்கின்றன. இதைக் கிழக்கில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு  ஆதரவு தெரிவித்துவரும் கட்சிகள்தான் அதிகம் சொல்கின்றன.

செவ்வாய்க்கிழமை (29) மாலை கிழக்கில் ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்குக் கோட்டாபய வந்திருந்தார். பல கருத்துகளை வெளியிட்டார்.

அதேவேளை, புதன்கிழமை (30) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் சமூக வலைத்தள பிரசாரம் ஒன்றைக் காணக்கிடைத்தது.

‘எதிர்ப்பு ஊர்வலங்களும் பேரணிகளும் இடைவெளிகளை நிரப்பப் போதுமானவை அல்ல. அதனாலேயே, நான் வித்தியாசமாகச் செயலாற்ற விரும்புகிறேன். என்னோடு ஒரு குவளை தேநீர் அருந்த வாருங்கள். நாங்கள் உட்கார்ந்து கதைப்போம். இலங்கையில் அரசியல் செய்யப்படும் முறையை நாங்கள் மாற்றி அமைப்போம்! எதிர்காலத்துக்காக நான் தயாராகி வருகிறேன். அதிகாரம் எவருக்கு உரியதோ, அவர்களிடமே அது திரும்ப ஓப்படைக்கப்படும். அது, நீங்கள்தான் – இந்த நாட்டின் மக்கள். நாங்கள் அமர்ந்து கதைப்பதற்கு, உங்கள் அற்புதமான யோசனைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன். விரைவில் நாங்கள் அமர்ந்து பேசுவோம்; புன்னகையோடு’

இது சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனாலும், தமிழர்களின் எதிர்பார்ப்பு இது அல்ல!
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல், நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு, முடிவைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்களை நிவர்த்திப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்குக் கிழக்குத் தமிழர்களும் விதி விலக்கான மனோநிலை உடையவர்கள் அல்ல.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்றன. குறிப்பிட்ட தரப்பினர் முடிவு செய்துவிட்டாலும், ஏன் கிழக்கு மாகாணத் தமிழர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இப்படியிருக்க நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் போதான போர்க்குற்றம் குறித்து, தமிழர்கள் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில், போர் முடிந்து சில மாதங்களிலேயே அந்தப் போரை முன் நின்று நடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை கோட்டாவுக்கு ஆதரவளிக்க முடியாது என்ற வகையான கருத்துகளை வௌிப்படுத்தி வருகின்றது. ஒவ்வொருவரும், பல்வேறு விடயங்களை மறைத்தே காலத்தை ஓட்டுகின்றார்கள்.

அதுபோல, இவ்வருடம் நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில், முதற்றடவை தோற்று, கடந்த தடவை வெற்றியைப் பெற்ற ‘அன்னம்’ சின்னத்துக்கும் இவ்வருடம் உள்ளூராட்சித் தேர்தலில் அறிமுகமான ‘மொட்டு’ சின்னத்துக்கும் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஆதரவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இது பெரும்பான்மைக் கட்சிகளின் யானை, கதிரை, கை, வெற்றிலை போன்ற சின்னங்களை, இல்லாமல்ச் செய்வதற்கான வழியைத் தோற்றுவித்துள்ளது.

தமிழர்கள் இன்று வடக்கு, கிழக்காக இருக்கின்ற நிலையில், கிழக்கு என்று தனியாக வெட்டிப் போட்டதுபோன்று, பிரித்தெடுப்பதற்கு முனையும் உதிரிக் கட்சிகளின் நோக்கம் முழுவதும், பிரதேசத்தில் ஆடாவடித்தனங்களையும் அத்துமீறல்களையும் அதிக உழைப்புகளையும் என்று அடுக்கிக்கொண்டு செல்லக்கூடிய வேண்டாத விடயங்களுக்காகவே என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படப் போகின்றனவா என்றால், 13 அம்சக் கோரிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இந்தக் கோரிக்கைகளை எந்தச் சிங்களக் கட்சியாவது ஆதரிக்குமா? இது ஜதார்த்தமானதொரு விடயமா என்றெல்லாம் கருத்துகள் எழுகின்றன. இது, கிழக்கு மக்களுக்கு மாத்திரம் தனியானதொரு பிரச்சினையல்ல.

இப்போதுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதத்துக்குள் வாழும் தமிழர்களிடம், நிலப்பரப்பு வெறுமனே 34 சதவீதம் தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள முனைவதும், கிழக்கில் இருப்பைப் பாதுகாப்போம் என்று சொல்வதும் எந்தளவில் பொருத்தமானதாக இருக்கும்.

இருந்தாலும், இதற்குள் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகுமா? கிழக்கில் நாங்கள் எமது இருப்பிடத்தையும் எமது எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைத்து, சாதிக்கத்துணிவதில் எந்த அளவுக்கு சாத்தியமிருக்கிறது என்பதுதான் தூண்டில் பிடி.

‘ஒன்றில்லையானால் மற்றையது’ என்ற கொள்கையே, கடந்த காலங்களில் இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். ஆனாலும், இம்முறை 35 பேரை உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டதால், கட்டாயமாக இரண்டாவது தடவை வாக்கெண்ணும் நிலை உருவாகும்  என்ற நம்பிக்கை இருந்தாலும், நம்பிக்கையீனமாகவே இருக்கிறது.

இரண்டு பெரும்பான்மைக் கட்சியினருடைய வேட்பாளர்களும் பெரும்பான்மைச் சிங்கள நடுத்தர மக்களையே, அதிக எதிர்பார்ப்புடன் நம்பியிருக்கிறார்கள்.

ஆனாலும், கிழக்கு மக்கள் கோட்டாபய வெற்றிபெறுவதையே விரும்புகிறார்கள் என்கிற மாயைத் தோற்றம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதை ஏற்படுத்த முனைகின்ற பெரும்பான்மை பலமில்லாத கிழக்கின் கட்சிகள், தம்மிடமிருக்கும் வாக்குப்பலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

அதேநேரத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இன்னல்கள் இப்போது வெளிக்கிளப்பப்படுகின்றன. கோட்டாபயவும் சரி, பிரேமதாஸவும் சரி, தராசில் வைத்து நிறுவை பார்ப்பதற்கானவர்கள் அல்ல.

வெல்லும் குதிரைக்குப் பணம் செலுத்துவது போன்று, வெற்றிபெறவுள்ள வேட்பாளர், வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள வேட்பாளருக்குத்தான் கிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றவாறான கருத்துகளும் பரவ விடப்படுகின்றன.

உண்மையாகவே, கடந்த காலங்களைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல, இன்றைய நிலையை, எதிர்காலத்தை நாம் உணர வேண்டும் என்பதுடன், கிழக்கின் தேவையை, நாம் எப்படிப் பூர்த்தி செய்வோம் என்ற வகையில்தான் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அதில், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் விவகாரம் முக்கியமானதாக தூக்கிப்பிடிக்கப்படுகிறது. கல்முனையை எடுத்துக் கொண்டால், ஒரு வருட காலமாக, அனைவரும் அரசியல் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விமர்சனம்.

யார் இம்முறை ஜனாதிபதியாக வருகிறாரோ, அவர் அதனை சீர் செய்து கொடுக்க வேண்டும். இது கிழக்கில் முக்கியம்தான். ஆனாலும், அந்த ஒன்றுக்காக அல்ல; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, தமிழர்களுக்கான சுயநிர்ணய அந்தஸ்து போன்றவையும் முன் நிற்கின்றன. இவ்வேளையில், யானை இல்லாதுவிட்டால், பூனை என்ற முடிவைத்தான் அப்பாவி மக்கள் எடுப்பார்கள்.

கல்முனை விவகாரம், வாழைச்சேனை கடதாசி ஆலை விவகாரம், நிலப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கும் தீர்வுகள் காணப்படவேண்டும். ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ தமிழர்களின் அரசியல் சாணக்கியத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சாட்டையடியாக, நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலைக் கொள்ளமுடியும். அந்தவகையில், மீண்டும் ஒரு முத‌ற் கோணலாக, இல்லாமல் இருக்குமானால் சரி!

இலட்சுமணன்