வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் போது ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் தலைவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாத குழுத் தலைவர் அமெரிக்க இராணுவ மோப்ப நாயால் துரத்தப்பட்ட நிலையில் சுரங்கப் பாதையொன்றுக்குள் பிரவேசித்து தான் அணிந்திருந்த குண்டுகள் பொருத்தப்பட்ட தற்கொலை மேலங்கியை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பக்தாதியை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதையும் அவர் தனது 3 பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு சுரங்கப் பாதையில் பிரவேசித்து குண்டை வெடிக்க வைப்பதையும் வெளிப்படுத்தும் நேரடி ஒளிபரப்புக் காட்சியை தொலைக்காட்சி இணைப்பின் மூலம் ஒரு திகில் திரைப்படத்தை பார்ப்பது போன்று கண்டுகளித்துள்ளார்.
மேற்படி தாக்குதல் நடவடிக்கை தொடர்பான நேரடி ஒளிபரப்பை அவதானிக்கும் முகமாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவ ஜெனரல்கள் மற்றும் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளடங்கலான அதிகாரிகளுடன் அமெரிக்க நேரப்படி கடந்த சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வெள்ளை மாளிகையிலுள்ள பிரத்தியேக அறைக்குள் பிரவேசித்துள்ளார். அதன்பின் அவர் ஏனையவர்களுடன் இணைந்து நேரடி தொலைக்காட்சி இணைப்பின் மூலம் சிரியாவிலான நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க இராணுவத்தின் விசேட படை யினர் 8 உலங்குவானூர்தி கள் மூலம் ஈராக்கிலுள்ள விமானப் படைத்தளமொன்றிலிருந்து ஒரு மணித்தியாலம் 10 நிமிட அதி அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு சிரிய நேரப்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டி சிறிது நேரத்திற்குப் பின்னர் பக்தாதி மறைந்துள்ளதாக புலனாய்வுத் தகவல் மூலம் அறியப்பட்ட பின்தங்கிய பிராந்தியமான பறிஷாவை வந்தடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் பலம் பெற்று விளங்கிய அந்தப் பிராந்தியத்தின் மீது இராணுவ உலங்குவானூர்திகள் வட்டமிடுவது புதிதான ஒன்றல்ல என்பதால் பிரதேசவாசிகளுக்கு அந்த உலங்குவானூர்திகளின் ஒலி வியப்பெதனையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவ்வாறு உலங்குவானூர்திகள் வட்டமிட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் நடத்தப்படுவது வழமையாகவுள்ளதால் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற பீதியே பிரதேசவாசிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில நிமிடங்களில் அந்தப் பிராந்தியத்தில் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
மேற்படி தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்க உலங்குவானூர்திகள் சிரியாவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள வான் பரப்பின் மீதாக பறந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்காக அமெரிக்காவுக்கு மேற்படி வான் பரப்பை திறந்து விட்ட ரஷ்யாவுக்கும் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்த அமெரிக்க விசேட படையினருக்கும் அவர் பாராட்டைத் தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்கப் படையினர் இட்லிப் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஹாயத் தஹ்ரீர அல் ஷாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பின்தங்கிய பாறிஷ் கிராமத்தில் பக்தாதி மறைந்துள்ளதாக நம்பப்பட்ட வீட்டின் மீது உக்கிரமாக சூட்டுத் தாக்குதலை நடத்தினர்.
தொடர்ந்து உலங்குவானூர்திகளிலிருந்து மோப்ப நாய் சகிதம் கயிற்றின் மூலம் தரையிறங்கிய அமெரிக்க விசேட படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய வண்ணம் பக்தாதி மறைந்துள்ளதாக அறியப்பட்ட வீட்டை நோக்கி விரைந்தனர்.
இதன்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் சிலர் தாமாக முன்வந்து அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தனர். இந்நிலையில் அமெரிக்கப் படையினரால் குறிப்பிட்ட வீட்டிலிருந்து 11 சிறுவர்கள் எதுவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் உயிர் தப்பியவர்களைவிடவும் இறந்தவர்களே அதிகம் என அவர் தெரிவித்தார்.
இறந்தவர்களில் பக்தாதியின் இரு மனைவியரும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் குண்டுகள் பொருத்தப்பட்ட தற்கொலை மேலங்கிகளை அணிந்திருந்த போதும் அந்த மேலங்கிகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.
இந்தத் தாக்குதலின் போது அமெரிக்கப் படையினர் அந்த வீட்டின் பிரதான வாயிலினூடாக உள்ளே பிரவேசிப்பதைத் தவிர்த்துள்ளனர். ஏனெனில் அந்த வாயில் பகுதியில் தம்மை சிக்க வைக்க ஏதாவது செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அவர்கள் அந்த வீட்டின் மதில் சுவரொன்றின் ஒரு பகுதியை வெடி வைத்துத் தகர்த்து உள்ளே பிரவேசித்துள்ளனர். அத்துடன் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாம் வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் தம்முடன் கொண்டு சென்ற ரோபோவொன்றை அந்த வீட்டிற்குள் அனுப்பும் நடவடிக்கை யில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் மறைந்திருந்த பக்தாதி தனது 3 பிள்ளைகள் சகிதம் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது அவரை இராணுவ மோப்ப நாய் சகிதம் அமெரிக்க விசேட படையினர் துரத்திச் செல்லவும் அவர் சுரங்கமொன்றுக்குள் பிள்ளைகளுடன் பிரவேசித்து தான் அணிந்திருந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்த தற்கொலை மேலங்கியை வெடிக்க வைத்து மரணத்தைத் தழுவியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருடன் சென்ற அவரது 3 பிள்ளைகளும் மரணமடைந்துள்ளனர். அத்துடன் அவரை துரத்திச் சென்ற மோப்ப நாய் காயமடைந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்தில் சுரங்கத்திலிருந்த சடலங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் பக்தாதி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் பக்தாதி தொடர்ந்து இரு வாரங்களாக அமெரிக்க விசேட படையினரின் கண்காணிப்பின் கீழ் இருந்துள்ளார். அவரை இலக்கு வைத்து இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 3 தாக்குதல் நடவடிக்கைகள் அவர் இடத்தை மாற்றிக் கொண்டதால் கைவிடப்பட்டிருந்தன.
இதுவரை காலமும் பக்தாதி சிரிய– ஈராக்கிய எல்லையிலேயே மறைந்திருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் அவர் தற்போது கொல்லப்பட்டுள்ள இடம் அந்தப் பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் துருக்கிய எல்லைக்கு அண்மையில் அமைந்துள்ளது. பக்தாதி பதுங்கியிருந்த வீடு இரு வாரங்களாக கண்காணிப்பிலிருந்ததாகவும் அதனைத் தாக்குவதற்கு அமெரிக்க விசேட படையினர் இரு மணி நேரத்தை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் சிரிய மற்றும் ஈராக்கிய பிராந்தியத்தில் இஸ்லாமிய தேசமொன்று உருவாக்கப்படுவதாக சுய பிரகடனம் செய்ததையடுத்து உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை பக்தாதி ஏற்படுத்தியிருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீவிரவாதியொருவராக அமெரிக்காவால் உத்தியோகபூர்வமாக இனங்காணப்பட்ட பக்தாதியை கைதுசெய்ய அல்லது கொல்வதற்கு வழிவகுக்கும் தகவலை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் டொலர் சன்மானத்தை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இத்தொகை 25 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரால் உருவாக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத குழுவின் உறுப்பினர்களாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் சிரியா மற்றும் ஈராக்கில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருதொகைத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறும் வரையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத் தில் அமெரிக்காவுக்கு உதவி வந்த குர் திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படையினர் தெரிவிக்கையில், ஐ.எஸ். தீவிரவாதிகளும் பக்தாதியும் அதிகளவில் நடமாடும் இடங்கள் குறித்து விபரங்களை அமெரிக்காவுடன் தாம் பகிர்ந்து கொண்டிருந்ததாக கூறுகின்றனர்.
பக்தாதியின் மரணம் குறித்து டொனா ல்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், அவர் ஒரு நாயைப் போலவும் கோழையொருவரைப் போலவும் மரணத்தைத் தழுவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு அமெரிக்க விசேட படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையொன்றின்போது கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத குழுவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின்லேடனின் சடலம் கடலில் புதைக்கப்பட்டது போன்று பக்தாதியின் சடலமும் கையாளப்படவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எமது போராட்டத்தில் பக்தாதியின் மரணம் முக்கியத்துவமிக்க தருணமொன்றாகவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் டுவிட்டர் இணையத் தளத்தில் தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
வட சிரிய நகரான ஜராபுலஸிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பிறிதொரு தாக்குதல் நட வடிக்கையில் பக்தாதியின் வலது கரமாக விமர்சிக்கப்படும் ஐ.எஸ். பேச்சாளரான அபூ அல் ஹஸன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.எஸ். சிரிய ஜனநாய கப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் புதிய தலைவராக மறைந்த முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் கர்டாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி- வீரகேசரி