பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் மற்றும் இசைக் கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துவரும் நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜா, ‘இசைக்கு நாடு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா இந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், அட்லான்ட்டா, நியூயார்ல், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் தமிழிலும், தெலுங்கிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நேற்று(25 )செய்தியாளர்களை இளையராஜா சந்தித்தார். அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் மற்றும் இசைக் கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா, ‘இசைக்கு நாடு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார். ‘இசை என்று வந்துவிட்டால் அங்கு நாடு இல்லை, காலம் இல்லை, எதுவுமே இல்லை. இசை இசைதான்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பகாலத்தில் உங்களிடம் இசைக்கலைஞராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி..? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், (ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி) என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரைப்பற்றி உங்களுக்கு ஒரு அபிப்ராயம் உள்ளது. இருக்கட்டும்.
ஆனால், அதே அபிப்ராயம் எனக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது’ (Why do you ask me (about A R Rahman)? You have the respect. You have an idea about him, you have it, But you should not expect that I must have the same expression) என்று கூறினார்.