தனது அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதைத் தவிர சஜித் பிரேமதாச வேறு பதவிகள் தொடர்பில் இதுவரை எதுவும் கூறவில்லை.
அதேபோன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருப்பது நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மாத்திரமேயாகும். இதனூடாக பிரதமர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வசந்த சேனாநாயக்க கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவ்வாறெல்லாம் நீக்கமுடியாது என்று அவர் கூறுகின்றார். ஆனால் கட்சியினால் அவரை நீக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் ஏன் இவ்வாறு கூறுகின்றார் என்று தெரியவில்லை. கட்சியை விமர்சித்தல், தவறான விடயங்களைக் கூறுதல் போன்ற காரணங்களினாலேயே அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விளக்கம் விரைவில் வசந்த சேனாநாயக்கவிற்கு அனுப்பிவைக்கப்படும். அதேபோன்று அவருக்கும், கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையிலான தொடர்பு குறித்தும் நாம் நன்கறிவோம் என்றும் அவர் கூறினார்.