தாக்குதலுக்கு முன் டிஎன்ஏ சோதனை நடத்தி பாக்தாதி அடையாளத்தை உறுதி செய்த அமெரிக்க படை!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே அவரது உள்ளாடையைக் கொண்டு மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தி அவரது அடையாளத்தை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதி காரப்பூர்வமாக அறிவித்தார். மேற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48).

சிரியா மற்றும் இராக்கில் ஆதிக் கம் செலுத்திவந்த தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இராக் கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதன் முதல்கட்டமாக, சில ஆண்டு களுக்கு முன்னர் சிரியாவின் எல்லை யோரம் உள்ள இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத் துள்ளதாக அறிவித்தனர்.

மொசூல் நகரில் ஒரு தலைமை யிடத்தை ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் அவர்கள் அப்போது சுருக்கி கொண்டனர். சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. அல் பாக்தாதி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

சிரியா

இந்நிலையில், சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அல்- பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கட்டிடத்துக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். குண்டு வெடித்ததால், சுரங்கத்தின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளை அகற்றி விட்டு, அல் பாக்தாதியின் உடல் பாகங்களை அமெரிக்க படையினர் சேகரித்தனர்.

கடலில் அடக்கம்

தாக்குதலுக்குப் பின்னர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் உடலை அமெரிக்க ராணுவத்தினர் கடலில் அடக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்த கடல் பகுதியில் பாக்தாதி உடல் வீசப்பட்டது? எந்த நேரம் வீசப்பட்டது? என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.

ஒசாமா பின்லேடன்

கடந்த 2011 ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவரும், சர்வதேச தீவிரவாதியு மான ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்ட பின்னர் அவரது உடலும் கடலில் வீசப்பட்டது குறிப்பிடத்தக் கது. அதைப் போலவே இப்போது அல்-பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டது.

உள்ளாடை

அபு பக்கர் அல் பாக்தாதியின் உள்ளாடையைத் திருடிச்சென்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக குர்து ரகசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராக் உளவுப் பிரிவு மூலம் பாக்தாதி எங்கிருக்கிறார் என்ற தெளிவான தகவல் அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கொல்லப் பட்டார். இந்தச் சம்பவத்துக்கு முன்னதாகவே சிரியாவைச் சேர்ந்த குர்து ரகசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் உள்ளாடையைத் திருடிச் சென்றதாகவும் அதனைக் கொண்டு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு பாக்தாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட தாகவும் குர்திய அதிகாரி ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். அல்-பாக்தாதி இறந்த பின்னர், மரபணு பரிசோதனை செய்யப்பட்டு அவர்தான் அல்-பாக்தாதி என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 பேர் கைது

இதனிடையே பாக்தாதியை பிடிப்பதற்கான தாக்குதலின்போது போது இரு நபர்களை அமெரிக்க ராணுவத்தினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது ராணுவ காவலில் உள்ளனர். அவர் களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.\

பாக்தாதியை விரட்டிய கானன்..

பாக்தாதியை விரட்டிச் சென்று குகைக்குள் தள்ளிய ராணுவத்தின் துப்பறியும் நாய் ஒன்றின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதன் செயலைப் பாராட்டியுள்ளார்.

அல்-பாக்தாதி தேடுதல் வேட்டையின்போது மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டன. தாக்குதலின்போது அபுபக்கர் அல் பாக்தாதியை சுரங்க அறைக்குள் துரத்திச்சென்று வீழ்த்திய ஒரு மோப்பநாய் காயமடைந்தது. சிகிச்சைக்குப் பின்னர் அந்த நாய் தற்போது மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் அதன் பெயர் பாதுகாப்பு கருதி வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் அதன் பெயர் விவரம் வெளியாகி யுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த நாய்க்குப் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் அதன் படத்தை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த மோப்ப நாயின் பெயர் கானன் என்பது தெரியவந்துள்ளது. இது பெல்ஜியன் மலினாயிஸ் வகை நாயாகும். இந்த வகை நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்றும், உத்தரவு கொடுத்தவுடன் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்ற வகை நாய்கள்தான், அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மீதான தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.