ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசு என்னும் பெயரில் ஆட்சிமுறை!

சர்வதேச சோஷலிசத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணிவிடுவிப்பு  மற்றும் இனப்பிரச்சினை  என்பற்றிற்கு  தீர்வினை  பெற்றுத்தர  எதிர்பார்த்திருப்பதாக  தெரிவித்திருக்கும்  சோஷலிச சமத்துவ கட்சி இதற்கு தகுந்த  தீர்வினை பெற்றுத்தரும் வகையிலான செயற்பாடுகளை உலக அளவில் முன்னெடுத்து வருவதாகவும்,முதலாளித்துவத்தின்  காரணமாகவே  இந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

 

சோஷலிச  சமத்துவ  கட்சியின்  தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை கலாநிதி  என்.எம்.  பெரேரா  நிலையத்தில் இடம்  பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அந்த கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன கூறியதாவது ,

ஜனாதிபதி தேர்தல் உலக நெருக்கடிகளுக்கு மத்தியில்  நடைபெறுகின்றது. அந்த வகையில் ஒரு பக்கத்தில் ஏகாதிபத்திய  யுத்தத்திற்கு  தயாராகும் அதேவேளை மறுபக்கம் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக ஜனநாயக உரிமைகளின்  மீது பாரிய ஒடுக்கு  முறைகள்  கட்டவிழ்த்து விடப்படுள்ளன.

அந்த வகையில் சோசலிச சமத்துவ  கட்சி மாத்திரமே  உலக சோஷலிச மூலோபாயத்திட்டத்தை முன்வைத்து தேர்தலில்  போட்டியிடுகின்றது.

இந்த நிலையானது உலக யுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்நிலையிலிருந்து வெளிவருதல் தொடர்பான    திட்டத்தையே நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளோம்.முக்கியமாக போருக்கான உந்துதலை நிறுத்து என்னும்  தலைப்பிலான பகுதியின் கீழ் நாம் அந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.

மோசமடைந்து வரும்  நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சி,தமது போட்டியாளர்களுக்கு எதிரான போர் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை திணிப்பதற்காக வர்க்கப்போரை நாடு வதைத்தவிர உலகெங்கிலும்  உள்ள ஆளும் வர்க்கங்களிடம்  வேறு  எந்த தீர்வும் இல்லை.

அணுவாயுதப்போரின் மிலேச்சத்தனத்தில் மட்டுமே முடிவுக்கு  வரக்கூடிய, போட்டியாளர்களின் புவிசார் அரசியல் பதற்றங்களில்  நீர்ச்சுழிக்குள் எமது நாட்டை இழுத்து விடுவதற்கு தொழிலாளர் வர்க்கம்  அனுமதியளிக்க கூடாது.

மோதலுக்கு மூல காரணமாக முதலாளித்துவத்தையும் காலாவதியான போட்டி தேசிய அரசு அமைப்பு முறையையும் தூக்கியெறிய  , சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த  போர்  எதிர்ப்பு   இயக்கத்தை  உருவாக்குவது மட்டுமே போருக்கான  உந்துதலை  நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.அத்தகைய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்குப்போராட தொழிலாளர்கள் மற்றும்  இளைஞர்களை  சோசலிச சமத்துவக்கட்சி யுடனும் நான்காம்  அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணையுமாறு நாங்கள் அழைக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.