ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில்
அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக சிறுபான்மை மக்கள் செறிந்தும், பரவியும் வசிக்கும் நாட்டின் இதர பகுதிகளிலும் இவ்வாறான முறைகேடுகளும், அடாவடித்தனங்களும் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளதாக இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலை மோசடிகள் மலிந்ததாக்கி தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்களை தேர்தலின்போது களமிறக்கி மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளின் விளைவுகள் ஆபத்தானவையாக அமையலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கோர யுத்தம் நடந்த காலத்தில் வட மாகாணத்தில், வன்னியில் வசித்துவந்த நிலையில் பின்னர், இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற வேறு மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்கள் பூர்வீக வசிப்பிடத்தில் தமது வாக்குகளை அளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு யுத்தம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால் இனியும் அவசியமில்லை என கூறி மறுக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது. இது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இதற்கு முன்னர் வாக்குரிமையுள்ள குறித்த இடத்துக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வந்தமை பற்றியும் கூறப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக இலங்கைக்கு வருகைதரும் அறுபதுக்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இங்கு வந்து, முன் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது சம்பந்தமான விடயத்தை பொறுத்தவரை, வாக்களிப்பின் இறுதிக் கட்டத்தில் வாக்காளர்களை மிரட்டி பலவந்தமாக வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகளை திணித்தல் மற்றும் மோசடிகள், அச்சுறுத்தல் என்பன மேற்கொள்ளப்படும் நிலைமை பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
மாலைவேளை, புவியியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமங்களின் அமைவிடம் போன்றவை இவ்வாறான ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு பெரிதும் ஏதுவாக அமைந்துவிடுவதை இவ்வாறான பிரதேசங்களின் கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நன்கு உணர்த்துவதாகவும் எடுத்துரைக்கப்பட்டன.
கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களில் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றமை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான காரியங்களில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் நடந்துகொண்ட விதம் இவற்றுக்கு சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
தனியார் தொலைகாட்சிகள் சிலவும், அச்சு ஊடகங்கள் சிலவும் ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்தி, பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்காளர்களை தவறாக வழிநடத்தி வருவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் விசனம் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடத்திலும் அவருடனான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் கூறினார்.
வாக்களிப்பு மோசடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படக்கூடிய கிராமங்கள் மற்றும் வாக்குச் சாவடிகள் பற்றிய பட்டியலொன்றை தமது கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
தன்சானியா, சியராலியோன், சிம்பாப்வே, பங்களதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பொதுநலவாய மற்றும் சார்க் நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றதன் மூலம் தாம் செய்த பங்களிப்புகள் பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது நினைவூட்டினார்.
இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் தினத்திற்கு முன்னர் இரண்டாம் கட்டமாக இங்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவில் பிரதான கண்காணிப்பாளர் மரிசா மார்டியஸ் இடம்பெறுவார்.
அத்துடன் பலத்த பலப் பரீட்சையாகவும், தீர்க்கமானதும், விறுவிறுப்பானதாகவும் அமையப்போகும் 2019ஆம் ஆண்டின் இந்த ஜனாதிபதி தேர்தலை பொதுநலவாய நாடுகளினதும், சார்க் நாடுகளினதும் தூதுக்குழுக்களும் கண்காணிப்பதற்கு முன்வந்துள்ளன.