நடிப்பில் சாதிக்க முடியாவிட்டாலும் தம்மால் ஓவியத்தில் சாதிக்க முடியும் என்கிறார் நடிகை ஷாம்லி.
நடிகை ஷாலினியின் தங்கை, நடிகர் அஜித்தின் மைத்துனி என்கிற அடையாளம் தனக்குத் தேவையில்லை என்பதிலும், தன் திறமை மூலம் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதிலும் தாம் தெளிவாக இருப்பதாகச் சொல்கிறார்.
சிங்கப்பூரில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்தவர், பின்னர் அமெரிக்கா, ஜெர்மனிக்குப் பறந்து மேற்கத்திய நடனத்தையும் கற்று வந்தார்.
இடையில் ஒன்றிரண்டு படங்களில் நாயகியாக நடித்து அசத்தினாலும் ஷாம்லிக்குத் திரையுலகில் நீடிக்கும் ஆர்வம் இல்லை போலிருக்கிறது. தற்போது ஓவியராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
“அனைத்து வகை ஓவியங்களிலும் கைதேர்ந்தவளாக உருவாகி வருகிறேன்.
“அண்மை யில் கூட பெங்களூருவில் எனது ஓவியங்களை வைத்துக் கண்காட்சி நடத்திய தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறேன்,” என்று சொல்லும் ஷாம்லிக்கு, சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் அதிகமாம்.
இடையில் நடிப்பில் கவனம் செலுத்தியதால் தனது தூரிகைக்கு ஓய்வு கொடுக்க வேண்டி இருந்ததாகச் சொல்கிறார். எனினும் படப்பிடிப்புகளின் இடைவேளையில் கையில் கிடைக்கும் காகிதத்தில் சிறு பென்சில் மூலம் ஏதேனும் வரைந்து கொண்டிருப்பாராம்.
இவருக்கு முன்பாகவே அக்கா ஷாலினியின் மகள் அனுஷ்கா ஓவியம் கற்கத் தொடங்கினாராம். அதன் பிறகுதான் இவருக்குள் ஒளிந்திருந்த ஓவியரின் ஆர்வமும் திறமையும் வெளிப்பட்டுள்ளன.
“பிரபல ஓவியர் ஏ.வி. இளங்கோ சாரிடம்தான் அனுஷ்கா ஓவியம் கற்றுக் கொண்டாள். இளங்கோவன் சாரின் ஓவியங்கள் தொன்மத்தையும் நவீனத்தையும் ஒருசேர பிரதிபலிக்கக் கூடியவை.
“அவரது ஓவியங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. அதனால் நானும் இளங்கோ சாரின் மாணவியாகி விட்டேன். அவர் அளித்த பயிற்சியால் நானும் ஓரளவு நல்ல ஓவியங்களைத் தீட்டி வருகிறேன். அவற்றுக்கு பலரது பாராட்டும் கிடைக்கிறது,” என்று சொல்லும் ஷாம்லிக்கு, தனது ஓவியங்களைக் கொண்டு உலகம் முழுவதும் கண்காட்சிகளை நடத்த ஆசையாம்.
ஓவியம் தீட்டுவது மட்டுமல்ல, அதைப் புரிந்துகொள்வதும் ஒரு கலைதான் என்று சொல்பவர், இந்தியாவை விட, வெளிநாடுகளில் ஓவியங்களுக்கு அதிக வரவேற்பும் மரியாதையும் கிடைப்பதாகச் சொல்கிறார்.
தனது அக்கா ஷாலினி, அவரது கணவர் அஜித் ஆகிய இருவருமே தம்மை ஊக்கப்படுத்தி வருவதாகச் சொல்லும் ஷாம்லி, ஓவியம் தீட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பிலும் கவனம் செலுத்துமாறு தன் தோழிகள் வற்புறுத்துவதாகச் சொல்கிறார்.