வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் இறைமை மக்களுக்குரியது. அதாவது இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அந்த இறைமை அதிகாரத்தை உதாசீனப்படுத்த முடியாது, மக்களே அதனை அனுபவித்தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறைமையை அனுபவிப்பதற்கான ஓர் அணுகுமுறையாக வாக்குரிமை கூறப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேட்சை குழுக்களின் சார்பிலும் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு தொடர்பாகவும் வாக்களிப்பது குறித்தும், ஜனாதிபதி எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார் என்பது தொடர்பிலும் பல கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் புரியாத புதிராகவே உள்ளது.
இது தொடர்பான ஒரு பரந்துபட்ட விளக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட்டிடம் ஒரு நேர்காணலை மேற்கொண்டிருந்தோம்.
அந்த நேர்காணலின் முழு விபரம் பின்வருமாறு,
கேள்வி : இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்?
பதில் : இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கேள்வி : நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது எத்தனையாம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இடம்பெறுகிறது?
பதில் : 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி தேர்தல் இடம்பெறுகிறது.
கேள்வி : உத்தியோகபூர்வமாக வாக்காளர்கள் அட்டைகள் விநியோகிக்கப்பட்ட காலம் முடிவடைந்த பின்னரும், வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா. அவ்வாறு எனில் அவர்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?
பதில் : உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்களிப்பு தினத்துக்கு ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்ற வாக்காளர் அட்டைகளை பகிர்வதற்காக தபால் ஊழியர்கள் செல்கின்றபோது வீடுகள் மூடப்பட்ட நிலையில் இருந்தால், அந்த வாக்காளர் அட்டைகள் குறித்த தபால் விநியோகிக்கின்ற அல்லது பகிர்ந்தளிக்கின்ற தபால் அலுவலகத்தில் வைத்திருக்கப்படும்.
எந்தவொரு வாக்காளருக்கும் வாக்களிப்பு தினத்தன்றோ அல்லது அதற்கு முன்போ குறித்த தபால் அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறெனினும் இலங்கையை பொறுத்தவரையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்களிப்பு நிலையத்திற்கு கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.
கேள்வி : தேர்தலில் வாக்களிக்கும் ஒரு வாக்காளரும் எவ்வாறான ஆயத்தங்களுடன் வாக்களிக்கும் நிலையங்களுக்கு செல்ல வேண்டும்?
பதில் : கட்டாயமாக உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இருந்தாலும் அதனுடனும், தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான செல்லுபடியான ஆள் அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். அதாவது தேசிய ஆள் அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை மற்றும் ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர் ஒருவராயின் ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.
இதேவேளை இந்த அடையாள அட்டைகள் எதுவும் இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது கிராம அலுவலருக்கு இரண்டு புகைப்படங்களை வழங்கி இதனை பெற்றுக் கொண்டு, அதன் மூலம் தேர்தலில் தனது வாக்கினை அளிக்கலாம்.
இவ்வாறான ஆள் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும். இவை எதுவும் இல்லாவிடின் எந்தவொரு வாக்காளருக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
கேள்வி : வாக்களிக்கும்போது ஒருவருடைய வாக்கினை சட்டவிரோதமான முறையில் பிறிதொருவர் துஷ்பிரயோகப்படுத்தியிருந்தால், பாதிக்கப்பட்ட வாக்காளருக்கான தீர்வு என்ன?
பதில் : குறித்த நடைமுறையானது இலங்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆள் அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்படாத காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது அது மிகவும் அருவி விட்டது. ஏனெனில் ஆள் அடையாள அட்டை ஆவணத்துடன் ஒப்பிட்டே வாக்காளர் அட்டைகள் வழங்கப்படுகின்றது. எனவே தற்போது இலங்கையில் ஆள் மாறாட்ட வாக்களிப்பானது பூஜ்ஜிய நிலையில் உள்ளது.
எனினும் வாக்காளர் ஒருவரது வாக்கினை பிறிதொருவர் அளித்திருந்தால், பாதிக்கப்பட்ட வாக்காளர் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகரிடம் தனக்கு வாக்குச் சீட்டு வேண்டும் எனக் கோரி, ‘கேட்டுப் பெறும் வாக்குச் சீட்டு’ என்ற வாக்குச் சீட்டை பெற்று வாக்களிக்க முடியும்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய வாக்கினை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
கேள்வி : ஒரு வாக்கினது முக்கியத்துவம் பற்றிக் கூற முடியுமா?
பதில் : வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் இறைமை மக்களுக்குரியது. அதாவது இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அந்த இறைமை அதிகாரத்தை உதாசீனப்படுத்த முடியாது, மக்களே அதனை அனுபவித்தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறைமையை அனுபவிப்பதற்கான ஓர் அணுகுமுறையாக வாக்குரிமை கூறப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
கேள்வி: இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் முறைமையையும் வாக்குச் சீட்டின் வடிவமைப்பினையும் பற்றி விளக்க முடியுமா?
பதில் : மிகப்பெரிய அளவில் வாக்குச் சீட்டில் வித்தியாசம் இல்லை. வாக்குச் சீட்டில் முதலாவது நிரலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களினதும் பெயர், சிங்கள அகரவரிசையின்படி அமையப் பெற்றிருக்கும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயருக்கு எதிரே அவர்களது தேர்தல் சின்னம் இருக்கும். அதற்கு அடுத்த நிரலில் வெற்றுக் கூடு இருக்கும். அந்த வெற்றுக் கூட்டில் வாக்கினையோ அல்லது விருப்பினையோ அளிக்க முடியும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுபட்டதாக அமையும். இலங்கையில் இருக்கின்ற ஜனாதிபதி முறைமையில் வாக்கையும் அளித்து, விருப்பையும் வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் மாத்திரம் இவ்வாறு வாக்கோடு, விருப்பு வாக்கினை அளிக்கலாம்.
மூன்று பேர் போட்டியிட்டால், அப்பொழுது வாக்காளார் ஒருவருக்கு ஒரு வாக்கினையும், இரண்டாவது விருப்பொன்றையும் அடையாளம் இட முடியும். எனினும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், ஒருவருக்கு வாக்கினையும், தான் விரும்பினால் மற்றைய இருவருக்கும் இரண்டு விருப்புக்களையும் வழங்க முடியும். மற்றைய இரு விருப்புக்களும் 2,3 என்று அடையாளம் இட வேண்டும்.
அதுபோல் ஒரு வாக்காளர் தனது வாக்கை அளிக்கின்றபோதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்களிக்கும் முறையாக இலக்கத்தை குறிப்பிடுவதையே கருதப்படும். குறிப்பிட்ட வெற்றுக் கூட்டில் 1 என இலக்கத்தை குறிப்பிட வேண்டும். இரண்டு பேர் போட்டியிடுகின்றபோதிலும் 1 என்று அடையாளமிடுவது சரியானதாகும்.
எனினும் ஒன்றுக்கு பதிலாக புள்ளடி இடலாம். ஒருவர் புள்ளடியையும் ஒன்று என்ற இலக்கத்தையும் ஒரே வாக்குச் சீட்டில் குறிப்பிட்டிருந்தால் அது பிரச்சினைக்குரியதாகும். காரணம் இதில் எது வாக்கு எது விருப்பு வாக்கு என்பது கேள்வியை ஏற்படுத்தும். ஏனைய தேர்தல்களில் புள்ளடியிடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு எண்ணை அடையாளம் இடுவதே முறையாகும். ஒரு வாக்குச் சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகளை இட்டிருந்தால் அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.
கேள்வி : தபால் மூல வாக்களிப்பினை பற்றி தெளிவுபடுத்துங்கள்?
பதில் : இம் முறை தபால்மூலம் வாக்களிப்பதற்கு 6 இலட்சத்து 59 ஆயிரம் பேர் தகுதிபெற்றுள்ளனர் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே கடந்த 18 ஆம் திகதி தபால்மூல வாக்காளர்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் 30 மற்றும் முதலாம் திகதிகளில் தபால்மூல வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளநிலையில், தபால்மூல வாக்குப்பதிவு இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் முகவர்களும் சென்று வாக்குப்பதிவினை கண்காணிக்கலாம்.
அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவும் மேற்பார்வையாளர்களை அனுப்பி அங்கு இடம்பெறும் வாக்குப்பதிவினை அவதானிப்பார்கள். அதன்பின்னர் வாக்குச்சீட்டுகள் பொதியிடப்பட்டு தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கேள்வி : அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதி எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார்?
பதில் : அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்தையும், ஆகக் குறைந்தது மேலும் ஒரு வாக்கினை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்றால், அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.
கேள்வி : எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாவிடின் ஜனாதிபதி எவ்வாறு தெரிவுசெய்யப்படுவார்?
பதில் : அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படாமல் போனால் நாடு முழுவதும் அதிகூடிய வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களும் போட்டியில் தொடர்ந்து இருக்கின்ற வேட்பாளர்களாகவும், ஏனைய 3 தொடக்கம் 35 ஆம் இடம் வரையுள்ள வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களாகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் பெயரிடப்படுவார்கள்.
அதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட 33 வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்ற வாக்குச் சீட்டுக்களில் 2,3 ஆம் விருப்புக்கள் முன்னணியில் உள்ள இரண்டு வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா என கணிப்பிட்டு பார்ப்பார்கள். இரண்டாம் கட்ட வாக்கெண்ணல் நடவடிக்கையானது முன்னெடுக்கப்படுமானால் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
அதன் பின்னர் இலங்கை முழுவதிலுமிருந்து வரும் குறித்த 33 வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குகளில் 2 அல்லது 3 ஆம் விருப்புக்கள் முன்னணியில் உள்ள இரண்டு வேட்பாளர்களில் யாருக்காவது வழங்கப்பட்டிருந்தால் அந்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஏற்கனவே அவர்கள் பெற்றிருந்த வாக்குளின் எண்ணிக்கையும் கூட்டப்படுகின்றபோது, அதிகூடுதலான வாக்குகளை பெற்றவர் ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்படுவார்.
கேள்வி : விருப்பு வாக்கின் அவசியத்தை பற்றி கூற முடியுமா?
பதில் : விருப்பு வாக்கு என்பது கட்டாயம் அல்ல. ஒருவர் விரும்பினால் வாக்கினை அளித்து விட்டு, அதற்கு மேலதிகமாக 2 என்ற இலக்கத்தினூடாக இன்னொருவருக்கு இரண்டாம் விருப்பினையும், 3 என்ற இலக்கத்தினூடாக மற்றொருவருக்கு மூன்றாம் விருப்பையும் வழங்க முடியும்.
கேள்வி: திருவுளச் சீட்டு பற்றி தெளிவுபடுத் துங்கள்?
பதில் : திருவுளச் சீட்டு என்றால் போட்டியில் முன்னணியிலுள்ள இரண்டு வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட வாக்கெண்ணல் நடவடிக்கையின் பிறகும், அதிகூடுதலான வாக்குகளை பெறாமல் இருவரும் சம அளவிலான வாக்குகளை பெற்றால் அதாவது ஏற்கனவே அவர்கள் பெற்ற வாக்குகளும், பின்னர் தோல்வியடைந்த 33 வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட 2,3 ஆம் விருப்புகளும் ஒன்று சேர்க்கப்படும். தொடர்ந்து இரண்டு வேட்பாளர்களும் ஒரே சம அளவிலான வாக்குகளை பெற்றால் அந்த நேரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி இருவருக்கும் திருவுளச் சீட்டு போடப்படும். அதில் யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளதோ அவருக்கு இன்னுமோர் வாக்கினை வழங்கி தேர்தல் ஆணைக்குழு அவரை நாட்டின் ஜனாதி பதியாக தெரிவுசெய்யும்.
கேள்வி: தேர்தல் வன்முறைகளை கட்டுப் படுத்துவதற்கான வழிகள் என்ன?
பதில் : இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு ஒரு பிரிவொன்றை அமைத்துள்ளது. அதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(நேர்காணல் : ஜெ.அனோஜன்)