85 வயது பாட்டியாக காஜல் அகர்வால்!

இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக நடிக்கிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்றுவரையிலும் கவர்ச்சி மற்றும் குறும்புத்தனமான வேடங்களில் மட்டுமே நடித்தவர் காஜல் அகர்வால்.

இவருக்கு இதற்கு முன்பு எந்த படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்த அனுபவம் கிடையாது. ‘இந்தியன் 2’ படத்தில் வயதான மூதாட்டியாக நடிக்கப்போகிறார். தனக்கு இந்தப் படத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று கூறுகிறார் காஜல் அகர்வால்.

இயக்குநர் சங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.சங்கர் படத்தில் மட்டும்தான் பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதனால்தான் சங்கர் படங்களில் பாடல் காட்சிகளின்போது யாரும் வெளியில் செல்வதில்லை. அப்படி சிறந்த பாடல்களையே சங்கர் தனது படத்தில் கொடுத்து வருகிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. படத்திற்கான சண்டைக் காட்சிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் படமாக்கப்பட்டு வருகின்றன.

சண்டைக் காட்சியை வடிவமைத்து வருகிறார் பீட்டர் ஹைன். இந்த சண்டைக் காட்சியில் சுமார் 2,000 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் செலவாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.

படத்தில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக, அதே சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாகத்தான் வயதான வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.