காஷ்மீருக்கு ஆதரவாக புனிதப்போர் நடத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராகி விடும்!

இந்திய படைகளுக்கு எதிராகவும், காஷ்மீரில் ஆயுதங்கள் ஏந்தி போராடி வருபவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது காஷ்மீர் மக்களுக்கும், இஸ்லாமாபாத்துக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததிலிருந்து பாகிஸ்தான் கடும் அதிருப்தியுடன் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வரும் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வருகிறது.

ஆனால், சர்வதேச தலைவர்களிடம் காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவகாரம் இதில் தலையிட வேண்டாம் என இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சியான பிடிவிக்கு இம்ரான் கான் நேற்று பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் பேசியதாவது:

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக, இன்றைய நாளை(ஞாயிற்றுக்கிழமை) நாம் கறுப்பு தினமாக அனுசரிப்போம். காஷ்மீரில் சில அமைப்புகள் புனிதப் போர் நடத்தவும், ஆயுதம் ஏந்தி இந்தியப் படைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தூண்டிவிடுகின்றன. அவ்வாறு செய்வது உண்மையில் காஷ்மீர் மக்களு்கு விரோதமானதாகவும், பாகிஸ்தான் நலனுக்கும் எதிரானதாகவும் அமையும்.

காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இந்தியா காத்திருக்கிறது, உலகின் கவனத்தைத் தீவிரவாதத்தின் பக்கம் இந்தியா திருப்பி வருகிறது. ஆதலால், காஷ்மீர் மக்களுக்கு நீண்டகாலத்துக்கு அரசியல்ரீதியாகவும், நிர்வாகரீதியான ஆதரவை மட்டுமே வழங்க முடியும்.

காஷ்மீர் மக்களிடம் கூறுகிறேன், இந்த தேசமே உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, எந்தவிதமான உதவியையும் பாகிஸ்தான் வழங்கும். காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், ” காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் தெரிவிப்போம். காஷ்மீர் சூழல் குறித்த சர்வதேச தலைவர்கள் மீண்டும் மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.