லண்டனில் லாரி ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை வியட்நாமைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டு எப்படி கன்டெய்னரில் அடைக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மோரிஸ் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர்கள் சீன நாட்டவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன. ஆனால் 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்களா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்று சீனத் தூதரகம் தெரிவித்தது.இந்நிலையில் இறந்த 39 பேரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்கள், “வியட்நாமின் யென்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி டாங் ஹு நம். இவர் அங்கு கத்தோலிக்கப் பாதிரியாராக உள்ளார். இவர் லாரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிரியார் ஆண்டனி டாங் ஹு நம் சனிக்கிழமையன்று கூறுகையில், ”எங்கள் ஒட்டுமொத்த மாவட்டமும் துன்பத்தில் உள்ளது. நான் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பற்றிய தொடர்புகளைச் சேகரித்து வருகிறேன்” என்றார்.
சீனா , வியட்நாம் அதிகாரிகள் உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal