எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் எமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும். அதற்கான கருமங்கள் நடைபெற்றவண்ணமுள்ள நிலையில் இந்த விடயத்தில் நாம் நிதானமாக செயற்படுவதற்கு தலைப்பட்டுள்ளோம்.
பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளில் இரண்டு வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார்கள். ஏனைய தரப்பும் அடுத்துவரும் நாட்களில் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனையடுத்தே எமது தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும், பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்றார்.
எனினும், தபால் மூலமான வாக்களிப்பு முன்னதாக கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை வெளியிடுவதற்கு சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? எனக் கேள்வி எழுப்பியபோது,எமது அறிவிப்பானது நிச்சயமாக உரிய நேரத்தில் எமது அறிவிப்பு விடுக்கப்படும்.
அந்த அறிவிப்பானது எமது மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமாக சிந்தித்து வாக்களிப்பதற்குரிய கால அவகாசத்தினை நிச்சயமாக வழங்கும். தபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக எமது அறிவிப்பினைச் செய்வதற்குரிய அதியுச்சமான பிரயத்தனங்களை செய்வோம் என்றார்.
இந்நிலையில் ஐந்து கட்சிகளின் 13அம்சக்கோரிக்கைள் தொடர்பில் வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தவதற்கு தயங்கும் நிலையில் அதுகுறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள் என்று அவரிடத்தில் வினவியபோது, ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதுதொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான கருமங்களை முன்னெடுப்பது என்பது தொடர்ந்து அந்தக்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் 30ஆம் திகதி கூடி ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம் என்றார்.