சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும், நாட்டையும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக் ஷ காட்டிக்கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்த சுகாதார மற் றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவ்விவகாரத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளா மல் சில ஊடகங்கள் தவறாகச் செய்திகளை வெளியிடுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்கவினால் அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் அந்நீதிமன்றினால் வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு தற்போது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கின்றது. ஆனால் அவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான சரியான தெளிவின்றி சில ஊடகங்கள் அஹிம்சா விக்கிரமதுங்கவின் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தூக்கி வீசிவிட்டது என்று செய்திகளை வெளியிடுகின்றன.
தனது தந்தை கொல்லப்பட்டமை தொடர்பில் நீதி கோருகின்ற உரிமை அவருடைய மகளுக்கு உண்டு. அவ்வாறிருக்க அந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் மிக மோசமாகக் காட்டிக்கொடுத்திருக்கிறார். ‘சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையானது அப்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். நான் அந்த அரசாங்கத்தின் ஒரு அதிகாரி மாத்திரமே. எனவே இப்படுகொலை தொடர்பான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கலிபோர்னிய நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஆகவேதான் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் கோத்தபாய ராஜபக்ஷ நிரபராதி என்று முடிவாகாது.
ஆனால் அதேவேளை அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருப்பதன் ஊடாக, இலங்கை வரலாற்றிலேயே அரச அதிகாரியாக இருந்த ஒருவர் அரசாங்கம் படுகொலையைச் செய்ததாகக் குறிப்பிடும் முதலாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கடந்த காலத்தில் எமது அரசாங்கம் தருஸ்மன் அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தது. நாட்டில் இடம்பெற்ற போரின் விளைவாக சிலர் கொல்லப்பட்டிருந்தாலும், குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டு எவரும் திட்டமிட்டுக் கொல்லப்படவில்லை என்றே நாம் கூறிவந்திருக்கின்றோம். எனினும் தற்போது லசந்தவை அரசாங்கமே கொலை செய்தது என்ற கோத்தபாயவின் வாக்குமூலம் சர்வதேசத்தின் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பப்போகின்றது.
சிவராமையும் அரசாங்கமா கொன்றது? பிரகீத் எக்னெலிகொடவை அரசாங்கமா காணாமலாக்கியது? வசீம் தாஜுதீனை கொன்றது அரசாங்கமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழும் அதேவேளை, அரசாங்கமே அவற்றைச் செய்தது என்று சர்வதேசம் முடிவுசெய்துவிடும்.
கோத்தபாய ராஜபக்ஷ இருதடவைகள் நாட்டை படுமோசமாகக் கைவிட்டிருக்கிறார். முதலாவதாக நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டமான 1991 ஆம் ஆண்டில் தானும், தனது மனைவியும் மிகுந்த மனவழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையொன்றைக் காண்பித்து, இராணுவத்திலிருந்து விலகி நாட்டைக் கைவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றார். இரண்டாவதாக தற்போது அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தில் அரசாங்கத்தையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்திருக்கின்றார். 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மின்சாரக் கதிரையில் ஏற்றிவிடுவோம் என்று ஏன்பிரசாரம் செய்தார்கள். ஆனால் தற்போது தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷவை மின்சாரக் கதிரைக்குக் கொண்டுசெல்வதற்கு கோத்தபாய வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது தானே குற்றம் சுமத்தப்படுகின்றது என்று நாங்கள் அமைதியாக இருக்காமல், அப்போது படுகொலைகள் இடம்பெறவில்லை என்றே கூறிவந்தோம். ஆனால் கோத்தபாயவின் சட்டத்தரணிகளால் எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் மிகவும் பாரதூரமானவை. அதன்மூலம் நாட்டை சர்வதேச மனித உரிமை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்கு வாய்ப்பேற்படுத்தி இருக்கின்றார்கள்.
மேலும் தேர்தல் பிரசாரங்களைப் பொறுத்தவரையில் கோத்தபாய ராஜபக்ஷ வேறு யாரோ எழுதிக்கொடுப்பவற்றையே பார்த்து வாசிக்கின்றார். அதிலும் அண்மையில் பிரசாரக்கூட்டமொன்றில் எழுதிக் கொடுத்ததைக் கூட சரியாக வாசிக்க முடியாமல் தடுமாறினார். இவர் ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், அதன் பின்னரும் மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடனேயே வைத்துக்கொள்வாரா என்று எமக்கு சந்தேகம் எழுகின்றது.
ஆனால் அதனூடாக ஜனாதிபதி பிரதமரிடம் ஆலோசனை பெற்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உயர்மட்டத்தில் அமுலாக வாய்ப்பிருக்கின்றது. அதேபோன்று எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தொலைக்காட்சி நேரடி விவாதமொன்றிற்கு கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கோத்தபாயவோ அல்லது மஹிந்த தரப்போ விவாதத்திற்கு வரமாட்டார்கள். ஏனெனில் ஏற்கனவே எழுதியிருப்பதை பார்த்து வாசிப்பதற்கு மாத்திரமே அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.