பில்கேட்ஸுக்கு வந்த சோதனை!

உலக பணக்கார்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் நீடித்த பில்கேட்ஸ் 24 மணி நேரத்தில் நிலைதடுமாறிப் போனதை அறிந்து கொள்வோமா?

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு  முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்க கணினிசார் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  நிறுவனர் பில்கேட்ஸ் 1.25 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்தார்.
அதை தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த  பில்கேட்ஸ் கடந்த 2018ம் ஆண்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தின்  நிறுவனர் ஜெப் பெஸோஸ் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் மைக்ரோசாப்ட்  நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார்.
அந்த தகவலின் படி, அமேசான் நிறுவனம் 3வது காலாண்டில் மொத்த வருவாயில் 26 சதவீதம் பெரும் இழப்பை சந்தித்தது. அமேசான்  நிறுவனப் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தது. அதன் காரணமாக ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக  குறைந்தது. 105.7 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.
ஆனால், அவரது முதலிடம் ஒரே ஒரு நாள் மட்டுமே நீடித்தது. அமேசான் நிறுவனத்தின் பங்குகள் நேற்று சற்றே உயரத்தொடங்கின.  இதன் காரணமாக ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 109.9 பில்லியன் டாலராக (7 லட்சத்து 78 ஆயிரத்து கோடி) உயர்ந்தது.  இதையடுத்து மீண்டும் ஜெப் பெஸோஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பில்கேட்ஸ் மீண்டும் இரண்டாம் இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக தக்கவைத்திருந்த முதல் இடத்தை மீண்டும் கைப்பற்றியும் ஒரே நாளில் அந்த இடத்தை இழந்தது பில்கேட்ஸுக்கு  மிகப்பெரிய ஏமாற்றமாக கருதப்படுகிறது.