தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரினதும் முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடரை திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நூறு வரையான மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.
மலர்வணக்கநிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நிருத்தக் சேத்திரா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கினர். அதையடுத்து மாவீரர் நினைவுரை ஆங்கிலத்தில் இடம்பெற்றது. இந்நினைவுரையை திரு.சிந்துாரன் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நடனாலய நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது.
நினைவு நடனத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுரையை திரு. ஈசன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச் சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய ஈசன், போராட்ட வடிவங்கள் மாறினாலும் ஒன்று பட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.
இறுதி நிகழ்வாக நாட்டிய நாடகம் ஒன்று இடம்பெற்றது. மாவீரரின் உன்னதமான தியாகத்தை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற இந்நாட்டிய நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் அர்ப்பணிப்பை அனைவர் முன்கொண்டுவந்த அக்கலைப்படைப்பில் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மவர் தியாகமகத்துவத்தை எடுத்துச்செல்வதாய் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு 9.00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.
Eelamurasu Australia Online News Portal














