அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் மேற்கண்ட நாளிதழ்தகளை இனி அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்ட டிரம்ப், அமெரிக்க அரசின் இதர துறைகளும் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஜொனாத்தன் கார்ல், ‘அதிபர் படிக்காமல் போனாலும், அங்கீகாரம் செய்யாவிட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் வழக்கம்போல் தரமான முறையில் தொடர்ந்து கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன்.
பத்திரிகையாளர்களின் சுதந்திரமான பணியை புறக்கணிப்பதுபோல் பாவனை செய்வதால் அந்த செய்தி மக்களை சென்றடையாமல் இருக்காது’ என குறிப்பிட்டார்.
நாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை அளிக்கும் சந்தா தொகையை அமெரிக்க அதிபர் நிறுத்துவது இது முதல்முறையல்ல. 1962-ம் ஆண்டில் முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடி ’தி நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன்’ என்ற பத்திரிகைக்கு தடை விதித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.