பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன்?

பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள், நாயகி என எதுவுமே இல்லை. மேலும் 10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கைதி ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்த என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இப்படி நடந்தால் என்ன ஆகும் என்பது மாதிரியான படம். லோகேஷ் இதை எழுதியுள்ளது அவ்வளவு விறுவிறுப்பான முறையில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது இது போன்ற படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்.
கார்த்தி
அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான்கு மணிநேரத்தில் நடக்கும் கதை. ’ஸ்பீட்’, ’டை ஹார்ட்’ போன்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பாடல்களுக்கு எங்கு நேரம் இருக்கும்?. 2-3 வருடங்கள் நடக்கும் கதை என்றால் அதில் பாடல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
’தீரன் அதிகாரம் ஒன்று’ தீவிரமான படம். அதை சரிக்கட்டக் காதல் காட்சிகள் தேவைப்பட்டன. அது இல்லையென்றால் ’தீரன் அதிகாரம் ஒன்று’ பயங்கரமான படமாகத் தெரிந்திருக்கும். ஆனால் ’கைதி’யில் அது தேவைப்படவில்லை. படத்தில் பரபரப்பு இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் லேசான தருணங்களும் இருக்கும்”.
இவ்வாறு கார்த்தி கூறினார்.