ஆஸ்திரேலியா தீர்ப்பாயம் முன் குவியும் அகதிகளின் விண்ணப்பங்கள்!

அகதிகளின் தஞ்சக்கோரிக்கை மற்றும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முடிவை மறுபரிசீலணை செய்யக்கோரி குவியும் விண்ணப்பங்கள் பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

“இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது,” என செனட் முன்பு தெரிவித்துள்ளார் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பதிவாளரான சியன்  லேதெம்.

இதனால், விண்ணப்பங்கள் தொடர்பாக தீர்ப்பாயம் முடிவெடுப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

“விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயர்வதால், 2017-18ல் 77 சதவீதமாக இருந்த முடிவெடுக்கும் விகிதம 2018-19ல் 66 சதவீதமாக குறைந்துள்ளது. வரும் காலங்களிலும் இந்த நிலைத் தொடரும்,” எனக் கூறியுள்ளார் சியன் லேதெம்.

கடந்த மூன்று மாதத்தில், இடப்பெயர்வு மற்றும் அகதிகள் பிரிவு 10,144 புதிய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும் அதில் 6281 விண்ணப்பங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில், 63,576 மேல் முறையீட்டு விண்ணப்பங்கள்  தீர்ப்பாயத்தின் இடப்பெயர்வு மற்றும் அகதிகள் பிரிவின் முன்னிலையில் உள்ளன.

2018- 19 நிதியாண்டில் அகதிகளாக மேல்முறையீடு செய்துள்ள 

 முதன்மையான 5 நாட்டவர்கள்:

*மலேசியா (5858)

*சீனா (1561)

*வியாட்நாம் (465)

*இந்தியா (227)

*பாகிஸ்தான் (178)

கடந்த மூன்றாண்டுகளாக பாதுகாப்புக் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் மலேசியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதே போல், இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் கோருவது அதிகரித்து வருகின்றது.