குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் முழுமையாக திரும்பப் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது. ஆனால், ‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் ‘ என்ற கோட்பாட்டின் கீழ் அது சுயாட்சிப் பிராந்தியமாகவே இருந்தது. 2047 ஆம் ஆண்டில் ஹொங்கொங் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது.
எனினும் இந்த சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹொங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹொங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
பொலிஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது. இதனால், போராட்டத்தை அடக்க முடியாமல் ஹொங்கொங் அரசாங்கம் திக்குமுக்காடி வந்தது.
இந் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலத்தை முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லேம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.